
கம்ப்யூட்டரின் `நினைவகம்’ எனப்படும் `மெமரி’யை அதிகரிக்க ஒரு மரத்தின் புரதம் உதவப் போகிறது என்றால் ஆச்சரியமாயில்லை? ஆம், `போப்லார்’ மரத்தில் இருந்து கிடைக்கும் புரத மூலக்கூறுகளையும், சிலிக்கா நானோ பார்ட்டிக்கிள்களால் ஆன மெமரி யூனிட்களையும் ஒன்று சேர்க்கும்போது, கம்ப்யூட்டர்களின் மெமரி திறன் பெருமளவு அதிகரிக்கிறது என்று ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள், கம்ப்யூட்டருக்கான `மெமரி’ பகுதியைக் குறைத்தும், அதன் திறனை அதிகரித்தும் காட்டியுள்ளனர். இது, இப்போதைய முறைக்கு மாற்றாக அமையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது மெமரி திறனை அதிகரிக்க முயலும்போது உற்பத்திச் செலவும் அதிகமாகிறது. சிலிக்கான் நானோ பார்ட்டிக்கிளுடன் `போப்லார்’ மரத்தின் புரதத்தைச் சேர்ப்பதற்கு ஜெருசலேம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மரபணுப் பொறியியலையும் பயன்படுத்தி இருக்கின்றனர்.
மெமரி திறனை அதிகரிப்பதற்கு இந்தப் புதிய தொழில்நுட்பம் எப்படி உதவுகிறது என்று ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் டேன்னி போரத்தும், அவரது மாணவர் இஸார் மெடல்ஸியும் விளக்கிக் காட்டியுள்ளனர். இந்த வெற்றியானது, கம்ப்யூட்டர்களின் நடப்பு மெமரி அளவைக் கூட்டும் அதேநேரம், அது பிடித்துக்கொள்ளும் இடத்தை வெகுவாகக் குறைக்கும். எனவே இது வர்த்தக ரீதியாக வெற்றி பெறும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment