Wednesday, November 10, 2010

டிரிங்...டிரிங்...





கோபு வீட்டிற்குப் புது தொலைபேசி வந்துவிட்டது. அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி!

கோபுவின் அம்மா, அக்கம் பக்கத்துப் பெண்களிடமெல்லாம் பெருமை பேசிக் கொண்டார்கள். கோபுகூட நண்பர்கள் ஒருவர்விடாமல் எல்லோரிடமும், தன் வீட்டிற்குத் தொலைபேசி வந்திருப்பதைச் சொன்னான். தொலைபேசி எண்ணையும் அனைவரிடமும் கொடுத்தான். தன்னிடம் போன்செய்து பேசும்படி ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டான்.

அன்றிரவு கோபு, புதிய தொலைபேசி வந்த மகிழ்ச்சியில் திளைத்தபடியே உறங்கினான்.

திடீரென தொலைபேசி மணி ஒலித்தது. கோபு, உடனடியாக எழுந்து ஓடிப்போய் எடுத்துப் பேசினான்:""ஹலோ, யார் பேசுவது?''""நான்தான் யானை!'' என்று பதில் வந்தது.கோபு,""ஓ! எங்கிருந்து பேசுகிறீர்கள்? நலம்தானா?'' என்று கேட்டான்.""நலத்திற்கு என்ன குறைச்சல்? வரிக்குதிரை வீட்டிலிருந்துதான் பேசுகிறேன்...'' என்றது யானை.""அப்படியா? சொல்லுங்கள், என்ன விஷயம்?''""என் குழந்தைக்கும், எனக்கும் சாப்பிடக் கரும்பு வேண்டும்!'' என்று யானை ஆசையுடன் கேட்டது.""இரண்டு கரும்பு போதுமா, இல்லை மூன்று கரும்பு வேண்டுமா?''யானை சொன்னது: ""இருபது கட்டு கரும்பு கொண்டு வாருங்கள், போதும்!''.

அடுத்தபடியாக, ஒட்டகச்சிவிங்கி பேசியது. அது யானையைப்போல உத்தரவிடும் தன்மையில் பேசாமல் சற்றுப் பணிவுடனேயே பேசியது: ""எங்கள் குடும்பத்தினர் மூன்று பேருக்கு ஐந்தாம் எண், ஏழாம் எண், ஒன்பதாம் எண் ரப்பர் செருப்புகளைக் கொடுத்து உதவ முடியுமா?'' என்றது.கோபு, கோபமாகப் பேசினான்: ""போன வாரம்தானே மூன்று ஜோடி செருப்புகளை உங்களுக்குக் கொடுத்தேன். அவற்றை என்ன செய்தீர்கள்?''""அந்தச் செருப்புகள் எல்லாம் பிய்ந்துபோய்விட்டன. என்ன செய்வது சொல்லுங்கள், நாங்கள் நிறைய நடக்கிறோம், ஓடுகிறோம். அதனால்தான், செருப்புகள் சீக்கிரம் பிய்ந்துவிடுகின்றன'' என்று ஒட்டகச்சிவிங்கி அப்பாவியாகப் பேசியதும் கோபு சிரித்துவிட்டான்.

அப்புறம் சில முயல்குட்டிகள் பேசின. அவை இருமியபடியும், தும்மியபடியும் பேசின: ""ஐயா, எங்களுக்கு இரண்டு நாட்களாகச் சளிபிடித்துக் கொண்டது. எங்கள் மூக்கு கண்களெல்லாம் எரிகின்றன. மிகவும் குளிராகவும் இருக்கிறது. உடனடியாக கம்பளிப் போர்வைகள் அனுப்பி எங்களைக் காப்பாற்றுங்கள்! பரிதாபமான பிராணிகளான எங்களைக் கைவிட்டுவிடாதீர்கள்!''கோபு, உடனே கம்பளிப் போர்வைகளும், மருந்துகளும், உணவும் அனுப்பிவைப்பதாக உறுதியளித்தான்.

பிறகு, மனிதக் குரங்குகள் இரண்டு கோபுவிடம் பேசின:""நீ ஒரு நல்ல மாணவனாக இருந்தால் உடனே எங்களுக்கு இரண்டு பூமாலைகளை அனுப்பு. ரோஜாப்பூ மாலைகளாக இருந்தால் நல்லது. நாங்கள் பூ மாலைகளைப் பிய்த்து விளையாடி நீண்ட காலமாகிவிட்டது. இன்னும் சற்று நாட்கள் சென்றால், பூ மாலைகளை எப்படிப் பிய்ப்பது என்றே நாங்கள் மறந்துவிடுவோம் போலிருக்கிறது.''""சரி, சரி கொஞ்சம் காத்திருங்கள். விரைவில் மாலைகளை அனுப்பி வைக்கிறேன்...'' என்று கோபு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குரங்குகளிடமிருந்து தொலைபேசியைப் பிடுங்கி ஏதோ ஒரு குரல் கர்ஜித்துப் பேசியது.

அந்தக் கராமுரா சப்தத்தால் கோபுவின் காது ஜவ்வே கிழிந்துவிடும்போலிருந்தது. உடனே கோபு,""நண்பா, நீ யாரென்று எனக்குத் தெரியவில்லை. தயவு செய்து கொஞ்சம் மெதுவாகப்பேசு!'' என்று கேட்டுக்கொண்டான். அது தன்னைக் கரடி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு சொன்னது:""அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் எனக்கு பத்து லிட்டர் தேனும், ஐம்பது கிலோ கிழங்கும் அனுப்ப வேண்டும். இப்படிச் செய்யாவிட்டால், பரீட்சையில் உனக்கு மதிப்பெண்களைக் குறைத்துப் போடும்படி உன் ஆசிரியரிடம் சொல்வேன்.''கோபு மிகவும் பயந்துபோனான். என்ன இந்தக் கரடி இப்படிப் பேசுகிறதே என்று வருந்தினான். பிறகு சிந்தித்துப் பார்த்து,"இந்தக் கரடியின் மிரட்டலுக்கு அடி பணியக்கூடாது' என்று தீர்மானித்தான்.

""ஏ, கரடி! அன்பாகக் கேட்டால் இந்தக் கோபு எதை வேண்டுமானாலும் கொடுப்பான். அதிகாரமாகக் கேட்டால் உன் தலையிலேயே குட்டுவான்'' என்றான் அவன்.""யார் தலையில் யார் குட்டுகிறார்கள் என்று விரைவில் பார்க்கலாம்! பொறுத்திருந்து பார்! காலம் பதில் சொல்லும்! நீயா நானா என்று பார்த்துவிடுவோம்! என்னை வெல்ல உன்னால் முடியாது! சிங்கத்தின் குகைக்குள் சிறு நரியா..? கொஞ்சம் பொறு. நான் மேற்கொண்டு சில வீர வசனங்களைப் படித்து மனப்பாடம் செய்த பிறகு, உன்னிடம் பேசுகிறேன்!''"இந்தக் கரடி ஒரு கலாட்டாப் பேர்வழியாக இருக்கும் போலிருக்கிறதே!' என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டான் கோபு.

கரடியிடம் கெஞ்சிக்கூத்தாடி தொலைபேசியை வாங்கிய கொக்குகள் அடுத்ததாகப் பேசின: ""கோபு அண்ணாச்சி! நாங்கள் இன்று நிறைய மீன்களைத் தின்றுவிட்டோம். அவை ஜீரணமாகாமல் தொண்டையில் கரிக்கிறது. நெஞ்சில் எரிச்சலாக இருக்கிறது. உங்களிடம் மாத்திரை இருந்தால் அனுப்பி உதவுங்களேன்!'' என்ற கொக்குகள் அழுதுவிட்டன.""சரி. சரி, அழாதீர்கள். நான் விரைவில் ஏற்பாடு செய்கிறேன்.'' என்று சொன்னான் கோபு.

பிறகு ஒரு குள்ளநரி பேசியது: ""கோபு, கோபு! நீ மிகவும் நல்ல பையன் அல்லவா! நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். என்னோடு சேர்ந்து டூயட் பாட ஒரு பச்சைக் கிளி வேண்டும். இங்கிலீஷ் பாட்டு தெரிந்த கிளியாக இருந்தால் நல்லது!''கோபுவால் கோபத்தை அடக்க முடியவில்லை.

""நடு இரவில் போன் பண்ணி நீ ஜோடிக் கிளி கேட்கிறாயா குள்ளநரியே! அதுவும் இங்கிலீஷ் பாட்டு தெரிந்த கிளிதான் வேண்டுமா? இரு, வந்து உன் வாலை அறுக்கிறேன்!'' என்று கத்தினான். நரி பயந்துகொண்டு தொலைபேசியை "டக்'கென்று வைத்துவிட்டது.

நாள் முழுதும் இதே தொல்லை. தொலைபேசிக்கு ஓய்வே இல்லை.""உங்கள் ஊர்த் திருவிழாவில் ராட்டினம் ஆட நாங்களும் வரலாமா? நாங்கள் இதுவரை ராட்டினத்தில் உட்கார்ந்ததே இல்லை'' என்று தொலைபேசியில் கலைமான்கள் கேட்டன.எரிச்சல் தாளாமல் கோபு,""சரி சரி வந்து தொலையுங்கள்!'' என்று தலையில் அடித்துக்கொண்டான்.

ஞாயிற்றுக்கிழமை அவன் கிரிக்கெட் விளையாடக் கிளம்பும்போது தொலைபேசி மணியொலித்தது.""ஹலோ, நான் கங்காரு பேசுகிறேன். அது டியூஷன் டீச்சர் வீடா?'' என்றது தொலைபேசிக் குரல்.""எந்த டியூஷன் டீச்சர்?'' என்று கேட்டான் கோபு. கங்காரு பதற்றமாகச் சொன்னது:""என் குட்டிக்கு பாடத்தில் திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது! உடனடியாக ஒரு டியூஷன் டீச்சரை அனுப்புங்கள். மிகவும் அவசரம்!'' என்றது கங்காரு.""இரு, உன் குட்டியின் காதைப் பிடித்துத் திருகினால் எல்லாம் சரியாகிவிடும்!'' என்றான் கோபு. உடனே கங்காரு கடுங்கோபத்துடன் பேசியது:

""என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நான் மன்னித்துவிடுவேன். ஆனால், என் குட்டியைப் பற்றி ஏதாவது தவறாகப் பேசினால் நான் சும்மா இருக்கமாட்டேன்!'' மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் கோபு இணைப்பைத் துண்டித்தான்.

தூங்கவே முடியாத அளவுக்கு மூன்று நாட்களாக நிறைய தொலைபேசி அழைப்புகள். கொஞ்சம் படுக்கலாம் என்று நினைத்தான் கோபு. அப்போது பார்த்து தொலைபேசி ஒலித்தது, "டிரிங்! டிரிங்! டிரிங்!'""இது என்னடா தொல்லை!''என்று சலித்துக்கொண்டே அவன் தொலைபேசியை எடுத்தான்.

""ஹலோ! பேசுவது யார்?''""வணக்கம். நான் காண்டாமிருகம் பேசுகிறேன். பேசுவதற்கு நேரமில்லை தம்பி. நீர் யானை புதை குழியில் சிக்கி மூழ்கிக்கொண்டிருக்கிறது. அதன் உயிர் போவதற்குள் வந்து காப்பாற்று!'' என்று அவசரமாகச் சொன்னது காண்டாமிருகம்.கோபு மிகவும் பதற்றமடைந்தான்: ""கவலைப்படாதே காண்டாமிருகமே. நான் இதோ புறப்பட்டுவிட்டேன்.

நீ, நான், யானை, ஒட்டகச்சிவிங்கி, முயல்கள், குரங்குகள், கரடி, கொக்குகள், நரி, கலைமான்கள், கங்காரு எல்லோரும் சேர்ந்து நீர்யானையை புதைகுழியிலிருந்து மேலே இழுத்துப்போட்டுவிடுவோம். ஆபத்திலிருப்பது எந்த உயிரானாலும் அதை உடனே காப்பாற்ற வேண்டும். நான் உடனே வந்துவிடுகிறேன்'' என்று சொன்னபடியே தொலைபேசியை வைத்துவிட்டு ஓடினான் கோபு.


""தொபுகடீர்!'' என்று ஒரு சப்தம் கேட்டது.

கோபு, கட்டிலிலிருந்து தரையில் உருண்டு கிடந்தான். அவன் திடுக்கிட்டு விழித்து சுற்றுமுற்றும் பார்த்தான்.

""அட! எல்லாம் கனவுதானா!'' என்று கொட்டாவி விட்டுக்கொண்டே மீண்டும் தூங்கினான்.

2 comments:

  1. சூப்பர்... தமிழிஷில் இணைக்கவில்லையோ... இன்னும்கூட பொருத்தமான கவர்ச்சிகரமான தலைப்பு கொடுத்தால் கூட்டம் கூடும்...

    ReplyDelete
  2. வண்டலூரில் ஒவ்வொரு கூண்டிலும் டெலிஃபோன் வச்சாச்சா

    ReplyDelete