Sunday, November 7, 2010

நீங்களும் ஹீரோதான்......




நான் புத்தகத்தில் படித்த ஒரு நிகழ்ச்சியை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..

ஓர் ஊரில் மூன்று ரசிகர்கள் இருந்தனர். ஒருவன் உணவு உண்பதில் ரசிகத்தன்மை உள்ளவன். சாப்பாட்டில் சிறிதளவு குறை இருந்தால் கூடக் கண்டுபிடித்து விடுவான். இன்னொருவன் வாசனையின் மூலமே மனிதர்களின் குணங்களை அறிந்து சொல்லக் கூடிய ஆற்றல் படைத்தவன். மூன்றாமவன் நித்திரையின் சுகத்தை அனுபவிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவன். நித்திரை செய்யும் போது சிறு குறை இருந்தாலும், அவனால் சரியாகத் தூங்க முடியாது.
ஒருநாள் இவர்கள் மூவருக்கும் சண்டை ஏற்பட்டுவிட்டது. "தங்களுக்குள் உயர்ந்த ரசிகன் யார்?' என்ற கேள்வி எழுந்தது.

ஒவ்வொருவனும் நான்தான் சிறந்த ரசிகன் என்று கூறினான். இதனால் இவர்களுடைய சண்டை மேலும் அதிகமாகத்தான் ஆயிற்று. முடிவில் மூன்று பேரும் அரசனிடம் சென்று தங்கள் வழக்கை கூறினர்.
அரசன் அவர்களைச் சோதனை செய்து பார்த்து, அவர்களில் யார் சிறந்த ரசிகன் என்பதைக் கூறுவதாகக் கூறினான்.

முதலில் சாப்பாட்டு ரசிகனுக்கு, ராஜ உபசாரத்துடன் கூடிய சிறந்த விருந்து ஒன்று அளிப்பதற்கு ஏற்பாடு செய்தான். அரசருக்கு அளிக்கப்படும் அறுசுவை உணவுகளும், கனி வகைகளும் தங்கத் தட்டுகளில் அவனுக்கு பரிமாறப்பட்டன.
சாப்பாட்டு ரசிகன் சாதத்தைப் பிசைந்தான். ஒரு கவளம் உருட்டி வாயருகே கொண்டு போனான்.

"சட்'டென்று அவன் முகம் சுருங்கியது. கையிலிருந்த சாதத்தைத் தட்டில் எறிந்து விட்டுக் கையை கழுவிக் கொண்டான். இதைப் பார்த்த அரசன் சாப்பாட்டு ரசிகனைப் பார்த்து, ""உனக்கு என்ன குறை நேர்ந்து விட்டது? ஏன் சாப்பிடாமல் எழுந்து விட்டாய்?'' என்று கேட்டான்.

""அரசே... சாதத்தில் பிண நாற்றம் அடிக்கிறது; எப்படி அதைச் சாப்பிட முடியும்?'' என்றான் சாப்பாட்டு ரசிகன். அரசன் சாதத்தை வாங்கி முகர்ந்து பார்த்தான். அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. அரசவையிலிருந்த பலரிடம் கொடுத்து முகர்ந்து பார்க்கச் செய்தான். அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை.
கடைசியில் அந்த அரிசியை விற்ற வியாபாரியை வரவழைக்கச் சொன்னான். அவனை விசாரித்தபோது, அவன் அரசர் சாப்பிடக்கூடியதற்கான உயர்ந்த ரக நெல்லை வாங்கிய விவசாயியின் விலாசத்தைக் கூறினான்.

விவசாயியைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன். ""அரசே... அவர் சொல்லுவது உண்மைதான். என் நிலத்திற்குப் பக்கத்தில் சுடுகாடு இருக்கிறது,'' என்று உண்மையை ஒப்புக் கொண்டான் விவசாயி. இதைக் கேட்ட அரசன், சாப்பாட்டு ரசிகனின் ரசிகத் தன்மையைக் கண்டு வியந்தான்.

அதற்குப் பிறகு, வாசனையினால் மனிதர்களின் குணங்களை அறியும் ஆற்றல் பெற்றுள்ளவனைத் தன்முன் அழைத்து வருமாறு ஒரு சேவகனை அனுப்பினான் அரசன்.

சேவகன் அவனை அழைத்து வருவதற்காக அவன் அருகில் செல்லும்போது, ""ஏய், கிட்டே வராதே! உன் மேல் வெள்ளாட்டு நாற்றம் நாறுகிறது,'' என்றான்.
இதைக் கேட்டு கோபம் கொண்ட சேவகன்... ""யாரைப் பார்த்து அந்த மாதிரிச் சொல்கிறாய்?'' என்று அந்த ரசிகனை அடிப்பதற்காகச் சென்றான்.
""ஏய், கிட்ட நெருங்காதே! வெள்ளாட்டு நாற்றம் பொறுக்க முடியவில்லை. மரியாதையாக இங்கிருந்து போய்விடு. இல்லாவிட்டால் அரசரிடம் கூறுவேன்,'' என்றான் இரண்டாவது ரசிகன்.

இதைப் பார்த்த சேவகர் சிலர் அரசனிடம் சென்று இச்செய்தியைக் கூறினர்.
அரசர் இருவரையும் அழைத்து வருமாறு கூறினார். "ஏன் ஐயா... எதற்காக இவர் மீது வெள்ளாட்டு நாற்றம் அடிக்கிறது என்று கூறினீர்கள்? நீங்கள் கூறுகிற மாதிரி நாற்றம் அடித்தால் மற்றவர்கள் இவரை நெருங்க விடுவரா?'' என்று ரசிகனை பார்த்துக் கேட்டார் அரசர்.

""எல்லாருக்கும் அது தெரிந்துவிட்டால் நான் எப்படி ரசிகத் தன்மை உள்ளவனாக விளங்க முடியும். நீங்கள் வேண்டுமானால் இவனை விசாரித்துப் பாருங்கள். நான் சொல்வது உண்மையா இல்லையா என்று தெரிந்து விடும்,'' என்றான் இரண்டாவது ரசிகன்.

""சேவகனே... நீ எப்பொழுதாவது வெள்ளாடுகளுடன் பழகியதுண்டா? இல்லாவிட்டால் வெள்ளாட்டுப் பாலையாவது சாப்பிட்டிருக்கிறாயா?'' என்று சேவகனைப் பார்த்துக் கேட்டார் அரசர்.

"அரசே... இதுவரை நான் வெள்ளாடுகள் இருந்த பக்கமே சென்றது கிடையாது. வெள்ளாட்டின் நாற்றம் எனக்கும் பிடிக்காது. அப்படியிருக்க நான் எப்படி அதன் பாலைச் சாப்பிட்டிருப்பேன்?'' என்றான் சேவகன்.
இத்துடன் திருப்தியடையாத அரசன் அவனது தகப்பனாரை வரவழைத்து விசாரித்தான்.

அவர் முழு விவரம் அறிந்ததும், ""அரசே, இந்த ரசிகர் சொல்வது உண்மைதான். சிறுவயதிலேயே இவன் தாயார் இறந்து விட்டாள். குழந்தையாக இருந்த இவனை ஓர் இடைக்குலப் பெண்மணி வளர்த்து வந்தாள். இவன் குழந்தையாக இருந்தபோது வெள்ளாட்டுப் பால் புகட்டியிருக்கிறாள்,'' என்றார்.
இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த மன்னன், இரண்டாவது ரசிகனையும் பாராட்டினார்.

மூன்றாவது ரசிகன் நித்திரை சுகம் காண்பவன். அவனுடைய ரசிகத் தன்மையைப் பரிசோதிக்க விரும்பினார் அரசர். அழகிய தங்கக் கட்டிலில் ஏழு இலவம் பஞ்சு மெத்தைகளை ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டு வைக்குமாறு கூறினார்.
நித்திரையில் சுகம் காண்பவன் வந்தான். தங்கக் கட்டிலில் படுத்தான். சிறிது நேரம்தான் தூங்கியிருப்பான். உடனே அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தான்.
"நித்திரைக்கு எவ்விதப் பங்கமும் வந்துவிடக் கூடாது என்று சகல முன்னேற்பாடுகள் செய்திருந்தும் கூட இவன் தூங்காமல் இப்படிப் புரளுகிறானே!' என்று அதிசயப்பட்டார் அரசர்.

அவனை அழைத்து, ""ஏன் பாதித் தூக்கத்தில் எழுந்து விட்டாய்? உனக்கு என்ன குறை?'' என்றார்.

""அரசே... என்னவென்று சொல்வேன்? முதுகில் ஏதோ ஒரு பொருள் உறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால்தான் எனக்குத் தூக்கம் வரவில்லை,'' என்றான் மூன்றாவது ரசிகன்.

அரசர் சேவகர்களை அனுப்பி, கட்டிலின் மேல் சோதனை செய்து பார்க்குமாறு கூறினார். கட்டிலின் மேல் ஒரு பொருளும் கிடைக்கவில்லை. பின்னர் ஒவ்வொரு மெத்தையாக எடுத்துப் பார்க்கச் சொன்னார். இவ்வாறு ஆறு மெத்தைகளையும் எடுத்த பிறகு, ஏழாவது மெத்தையில் ஒரு தலைமயிர் மலருடன் சிக்கிக் கொண்டு இருப்பதைச் சேவகர்கள் கண்டனர். அதை எடுத்துக் கொண்டு வந்து அரசரிடம் கொடுத்தனர்.

அதை வாங்கிப் பார்த்து வியந்த மன்னன், மூன்றாவது ரசிகனை அழைத்து முதுகைக் காட்டுமாறு சொன்னான். அவன் முதுகில் அந்தத் தலைமயிர் பதிந்திருந்த அடையாளம் அப்படியே இருந்தது.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மன்னன், ""உங்கள் மூவருடைய ரசிகத் தன்மையையும், திறமையையும் கண்டேன். நீங்கள் மூவருமே சிறந்தவர்கள்தான். இருப்பினும் முதல் ரசிகனும், இரண்டாவது ரசிகனும் ஐம்புலன்களும் விழித்திருக்கும் போது, தங்கள் புத்தி சாதுரியத்தைக் காட்டினர். ஆனால், மூன்றாவது ரசிகனோ தூங்கும்போது ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னான். எனவே, மூவரில் நித்திரை சுகம் அறிந்த ரசிகனே தலைசிறந்தவன்,'' என்ற மன்னன் மூவருக்கும் ஆயிரம் பொற்காசுகள் கொடுத்தான். இருப்பினும் நித்திரை சுகம் அறிந்த ரசிகனுக்கு இன்னும் ஏராளமான பரிசுகள் கொடுத்தார்.

இதில் நான் புரிந்து கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை கண்டிப்பாக இருக்கிறது. அதை எது என்று தெரிந்து விட்டால் நாம் ஒவ்வொருவரும் அந்தந்த திறமைகளில் ஹீரோ தான்.

அப்படியே தெரியாவிட்டாலும் நீங்கள் உங்களுக்கே தெரியாமல் உங்கள் திறமையை எப்போதாவது ஒரு நேரத்தில் செய்து இருப்பீர்கள். அப்போது மற்றவர்களுக்கு நீங்களும் ஹீரோவாக இருந்து இருப்பெர்கள்.

அதை எது என்று அறிந்து நீங்களும் ஹீரோ ஆகா முயற்சி செய்யுங்கள். நானும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன். தெரிந்தால் நீங்களும் ஹீரோதான்...

கருத்துக்கள் இருந்தால் சொல்லிவிட்டு செல்லுங்களேன்..

4 comments:

  1. நமக்கு கூட தூக்கம் தான்... ஆனால் தலைமயிர் அல்ல, மெத்தைக்கு அடியில் கல்லையே வைத்திருந்தாள் கூட எழுவதற்கில்லை...

    ReplyDelete
  2. சூப்பர் .....நானும் என்ன திறமை நமக்குள்ள தூங்கி இருக்குன்னு பார்த்தேன்..
    தூக்கமே ஒரு திறமை தான்னு புரிய வட்சிடீங்க...

    ReplyDelete
  3. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை கண்டிப்பாக இருக்கிறது. அதை எது என்று தெரிந்து விட்டால் நாம் ஒவ்வொருவரும் அந்தந்த திறமைகளில் ஹீரோ தான்!

    I agree with you!

    Somebody found their talent in which field, they involved in the same field, they succeed and they are the heroes of that field like Sachin, Ilayaraaja, SPB, Viswanathan Anand.

    Some talents identified by some others and they recognised..,by luck.

    lot of people can't able to find their talents in which field they have talent.., they are searching.., searching till the end of life.


    Unnayarinthaal nee unnayarinthaal ulagathil poraadalaam!

    ReplyDelete
  4. நான் இப்பவே கண்டு பிடிக்கிறேன் என்னிடம் என்ன ஹீரோயிசம் இருக்கிறது என்று...
    அப்புறம் பதிவிடுவோம்ல

    ReplyDelete