Tuesday, November 16, 2010

இன்பத்தின் எல்லையே துன்பம்...



இன்பம்...
இன்பம் என்பது எல்லா உயிர்க்கும் பொதுவானது.

இப்படி இன்பத்தை பற்றி எழுதுகிறபோதே இன்பமாக இருக்கிறது. எல்லோரும் இன்பமாக வாழவே ஆசைபடுகிறோம். அதிலும் இளமை பருவம், இன்பங்களை அனுபவிக்க துடிக்கும் பருவம். அதனால்தான் இளமைக் காலம் வாழ்வின் வசந்தகாலம் என்று வருணிக்கபடுகிறது.

இந்த பருவத்தில்தான் எண்ணங்கள் சிறகடித்து எங்கெங்கோ பறக்கும். புதுமைகளைக் காண மனம் துடிக்கும். இன்பத்தையெல்லாம் அள்ளி அனுபவிக்க இதயம் ஏங்கும். கரணம் வயது. இது அரும்பு மீசை துளிர்க்கும் வயது. குறும்பு ஆசைகள் கொப்பளிக்கும் வயது. பற்றவைத்த உடனேயே பற்றி எரியும் கற்பூர வயது.

தூக்கி வளர்த்தவர்களை எல்லாம் தூக்கி எறிய சொல்லும். ஊட்டி வளர்த்தவர்களை உதறி தள்ளச் சொல்லும். நேற்று பார்த்த ஒற்றை பார்வையில் ஓடிப்போக சொல்லும். எல்லாம் எதற்காக? இனம் புரியாத இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்ற வெறிதான். அடைய துடிக்கும் துடிப்புதான். இந்த கருத்தை வெளிபடுத்துகிற சின்ன கதையை பாருங்கள்...

ஓர் ஆசிரமம் இருந்தது. அந்த ஆசிரமத்தில் தள்ளாத வயதிலும் தமது வேலைகளை செய்து வந்தார் குரு.

அவருடன் சில சீடர்களும் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவருமே இளைஞர்கள். சமையல் உட்பட பல வேலைகளையும் குருவே செய்து வந்தார். சில சமயங்களில் இளைஞர்களும் உதவி செய்தனர். இருந்தாலும் அவர்கள் உற்சாகத்தோடு வேலை செய்யவில்லை.

ஒருநாள் சீடர்கள் ஒன்று கூடி குருவிடம் "குருவே... சமையல் வேலைக்கு மட்டுமாவது ஒரு பெண்ணை நியமிக்கலாமே?" என்றனர்.

அதற்கு குரு "தேவையில்லாத தொல்லை! நீங்கள் வந்திருப்பது மன ஒருமைப்பாட்டுக்காக, அது நேரெதிராக செயல்பட்டு உங்கள் கவனத்தை சிதறடிக்கும். எண்ணங்களை அலைபாய வைக்கும்" என்றார்.

"ஒரு வயதான பெண்ணை நியமிக்கலாமே?" என்றான் ஒரு சீடன்.

குரு அப்போது எதுவும் பேசவில்லை. அன்றிரவு அவர் சமைத்த உணவில் உப்பும், காரமும், எண்ணையும் சற்று அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தன.

உண்டு முடித்த சீடர்கள் உறங்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் உறங்கிய பிறகு குரு மெல்ல எழுந்தார். கதவை வெளிப்புறம் பூட்டி கொண்டு எங்கோ சென்று விட்டார்.

நள்ளிரவு வேளையில், சாப்பிட்ட அதிகமான உப்பு வேலை செய்ய ஆரம்பித்தது. சீடர்கள் ஒவ்வொருவராக எழுந்தனர். வந்து கதவை தள்ளினால் அது வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தது. தட்டி தட்டி பார்த்தனர். பின்னர் அறையின் உட்புறம் பார்த்தனர். எங்கும் தண்ணீர் ஒரு சொட்டு கூட இல்லை. உள்தொட்டியில், பாத்திரம் கழுவிய அழுக்கு நீர் இருந்தது. இதற்குள் பலருக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. அவர்களுள் ஒருவன், தொட்டியில் கைவிட்டு மேலாக தெளிந்த நீரை அள்ளி பருகினான். அதை பார்த்த அடுத்தவன், மேலோட்டமாக கையால் நீரை அள்ளி பருகினான். அதனை பின்பற்றி இன்னொருவன். இப்படியே மாறி மாறி அவர்கள் அள்ளி பருகவே நீரும் கலங்கி போய் இவர்களுக்கும் இது பழகிப்போய் அதையே குடித்து அந்த தொட்டி நீரும் தீர்ந்து விட்டது.

மறுநாள் காலை குரு வந்து கதவை திறந்தார். இரவு தாங்கள் பட்ட கஷ்டத்தை குருவிடம் விளக்கமாக கூறினர்.

குரு சிரித்தார்,

" கொஞ்ச நேரத்திற்கு தொண்டை வறண்டு போனதுமே அழுக்கு நீரையே குடிக்க தயாராகிவிட்டீர்களே? இந்த நிலையில், வயதான ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினால் என்ன நேரிடும்.? தாகத்திற்கு எது கிடைத்தாலும் பொது என்ற நிலையிலல்லவா உங்கள் மன உறுதியை வைத்திருக்கின்றீர்கள்...." என்றார்.

சீடர்கள் வெட்கி தலை குனிந்தனர்.

வாலிபத்தின் வாசற்படிகளில் பயணம் செய்து கொண்டிருக்கின்ற இளைஞனே! கதையை படித்தபோது மனது கனமானதா? மனதோடு மல்யுத்தம் செய்கின்ற காலம் இந்த காலம். மனம் உன்னை தூண்டி ஏமாற்ற நினைக்கும். 'இக்கரைக்கு அக்கறை பச்சை' என்ற பெரியோர்களின் அனுபவ மொழியை கேட்டிருக்கலாம். ஒரு பொருளை அடையும் வரைக்கும், தூரதிலிருக்கும்போது அது உனக்கு இன்பம்தரும் பொருள் போலவே காட்சியளிக்கும். அதை அடைய துடிக்கும், அனுபவிக்க துடிக்கும். ஆனால் எதை இன்பம் என்று கருதி அடைய நினைத்தீர்களோ, அதை அடைந்துவிட்டால் அதுவே துன்பதிகும் காரணமாகிறது.

'கள்ளங்கபடமற்ற இளமை என்பது விலைமதிக்க முடியாத சொத்தாகும். இன்பம் என்று தவறாக கருதப்படும் ஒரு கண நேர கிளர்ச்சிக்காக இந்த விலை மதிப்பு மிக்க சொத்தை இழந்து விடாதீர்கள்" என்றார் காந்தியடிகள். ஆம், ஆற்றல்மிக்க இளமையை ஏதோ ஒன்றிற்காக இழந்து விடாதீர்கள்.

அலைபாயும் ஆசைகளுக்கு அணைகட்ட வேண்டிய அற்புத பருவம் இது. உங்களது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதும் இந்த பருவம்தான். இளமை பருவத்தில் தடுமாறினால் முதுமை பருவம் தடம் மாறி போகும். தடம் பார்த்து நடக்க வேண்டும். அதே நேரத்தில் தடம் பதித்தும் நடக்க வேண்டும்.

இனிய நண்பர்களே! இன்பத்தை அடைவதுதான் இளமையின் இலக்கு என்று உன் மனதில் பதிந்திருக்கலாம். அல்லது நண்பர்கள் உன்னிடம் பதித்திருக்கலாம். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர்கள் என்று யாரையேனும் காட்ட முடியுமா? அல்லது துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாரையாவது காட்ட முடியுமா? இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் முடிவில் இன்பமும் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இளைஞர்கள் அறிந்தோ, அறியாமலோ கவர்ச்சியினால் ஈர்க்கப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது, ஓர் எதிர் சக்தி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தேடி சென்று அடைவதில் உள்ள சுகம், அடைந்த பின்னர் இருப்பதில்லை. இன்றைய அதீதமான விருப்பு, நாளைய அதீத வெறுப்பாக மாறும் என்பதை கீழே உள்ள கதை உங்களுக்கு விளக்கும்.

இளவரசன் ஒருவன், அரண்மனை வேலைக்காரியின் அழகில் மயங்கினான். அவளை அடைய துடித்தான். ஆனால் அந்த வேலைக்காரியோ ஒரு வேலைக்காரனை உயிருக்கு உயிராக நேசித்தாள். அதை அறிந்த இளவரசன் வேதனைப்பட்டான். அமைச்சரிடம் சொல்லி இருவரையும் எப்படி பிரிப்பது? வேலைக்காரனை நாடு கடத்தலாமா? அல்லது சிறையில் அடைக்கலாமா ? என்று கேட்டான். அமைச்சர் அப்போது இளவரசரிடம் சொன்னார், "பிரிவு என்றுமே ஆர்வத்தை ஆவேசமாக தூண்டும். இருவரும் தூரத்திலே இருந்து ஒருவரை ஒருவர் பார்ப்பதால்தான் இந்த ஈர்ப்பு. அருகருகே இருவரையும் சேர்த்து வைத்தால் பிரிந்து விடுவார்கள். எனவே ஒருவரை ஒருவர் பார்க்கும்படி கட்டி போடுங்கள் என்றார்.

அதன்படியே இருவரையும் கட்டி போட்டனர். ஒருநாள் கழித்து மறுநாள் கட்டை அவழ்த்து விட்டதுமே இருவரும் வேறு வேறு திசைகளில் ஓட்டம் பிடித்தனர். அதன் பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க கூட விரும்பவில்லை.

இந்த ஞானத்தை மனதில் நிரப்புங்கள். எதையும் அடைந்தே தீர்வது என்பதில் இருக்காதீர்கள். அதன் இன்னொரு பக்கத்தையும் புரட்டி பாருங்கள். சிலர் பணம் இருந்தால்தான் எதையும் செய்யலாம் என்று நினைக்கின்றனர். அடுத்து, பணம் போதாது பதவி வேண்டும், பதவியின் அதிகாரம் வேண்டும் என்று நினைக்கின்றனர். மூன்றாவதாக, பணம் பதவி இருந்தாலென்ன? புகழ் வேண்டும், மக்களால் பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.

பணம், பதவி, புகழ் இப்படி ஒவ்வொன்றும் பெற்றவுடன் ஆணவம் தலைதூக்குகிறது. இனி என்னை யாரும் அசைக்க முடியாது என்கின்றனர். அந்த கணமே வீழ்ச்சி ஆரம்பமாகிறது.

பணமே இல்லை என்றால் துன்பம், அளவுக்கு மீறி பணம் இருப்பதும் துன்பம். பட்டினியும் தீங்கு. அதிகமான உணவும் தீங்கு அளவோடிருப்பதும்தான் ஆனந்தம். திடமான மனது எந்த நிலையிலும் தடுமாறுவதில்லை. சலனங்களும், சபலங்களும், தம் நியாயங்களுக்கு காரணம் தேடி அலையும். அலைபாயும் மனதுக்கு அணைகாட்டுங்கள். காலம் கனிகிறபோது தானாகவே கதவு திறக்கும். அதுவரைக்கும் உங்களுக்கு தேவை பொறுமை!.......


பதிவு பிடித்திருந்தால் தங்கள் கருத்தை மறக்காமல் சொல்லி விட்டு செல்லுங்கள்....

5 comments:

  1. பதிவு பிடித்திருந்தால்தான் சொல்லனுமா? எனக்கு பிடிக்கல. எனக்கு பிடிச்சது scroll barதான்.

    ReplyDelete
  2. // இரா.சிவக்குமரன் said...

    aen indha kola veri.....

    ReplyDelete
  3. இது ஒரு நல்ல பதிவு உங்களுக்கு எனது பாராட்டுகள் 10000000000000000000000000000000.....ஓட்டுகள்

    ReplyDelete