Tuesday, November 16, 2010

முன்னூறு கொடுத்து மூவாயிரம் ரூபாய் வாங்கிவிட.




நண்பகல் இரண்டு மணி. மண்டையைப் பிளக்கிற வெயில். சைக்கிளை மிதிக்கும் ரஹீம் கால்களில் அனல் வாரி கொட்டுவது போன்று வெயிலின் உக்கிரம் தகிக்கிறது. சோர்வாக காணப்பட்ட அவனது கால்கள் மெதுவாக சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தன.

மங்கிய கண்களில் சாலையின் கானல் நீர் கொதித்து மறிக்கிறது. தலை முதல் கால் வரை வழிந்தோடிய வியர்வைத் துளிகள் அவனது அவஸ்தையை மேலும் அதிகமாக்கி கொண்டிருந்தது. சைக்கிள் கேரியரில் இருந்த பழைய டிரங்கு பெட்டியில் துருப்பிடித்த பழைய சைக்கிள் பாகங்கள், ஓட்டை பாத்திரங்கள், உடைந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் என ஆக்கர் பொருட்கள் நிரம்பி கிடந்தன. இரு பக்கமும் தொங்கிக் கொண்டிருந்த கோணிப்பைகளில் ஒன்றில் கிழிந்த தாள்களும் மற்றொன்றில் கண்ணாடி குப்பிகளுமாக நிரம்பி வழிந்தன.

இன்றைக்கு வழக்கத்தைவிட கூடுதலாகவே ஆக்கர் பொருட்கள் வாங்கி இருந்தான். காலையில் கடை முதலாளியிடம் வாங்கிய முன்பணம் ஐநூறு போக முந்நூறு ரூபாயாவது மீதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.இன்றைக்கு வட்டிக்காரனிடமிருந்து ரூபாய் வாங்கிவிட வேண்டும். ரிஷ்வானின் பள்ளியில் பணம் கட்டச் சொல்லி ஒருவாரம் ஆகிவிட்டது.

நேற்று இரவு எழுத நோட்டு கிடைக்கவில்லை எனப் பழைய நோட்டுகளிலிருந்து எழுதப்படாத பேப்பர்களைக் கிழித்து எடுத்துக் கட்டிக்கொண்டிருந்தான்... என்று மனதுக்குள் எண்ணியவாறு சைக்கிள் ஹேண்டிலில் சுற்றியிருந்த வெள்ளைத் துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே சைக்கிளை மிதித்தான்.

ரிஷ்வான் ரஹீமின் மூத்த மகன். பக்கத்து டவுனிலுள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறான். குழந்தை வளர்ந்து பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்படும் பருவம் வந்தபோது, பக்கத்து வீடுகளில் உள்ள பிள்ளைகள் டை கட்டி ஷூ போட்டு மிடுக்காக வேன்கள், பஸ்களில் ஏறி பள்ளிக்கூடம் செல்வதைக் கண்டபோது தனது பிள்ளையும் அது போல போக வேண்டும், படிக்க வேண்டும் என்ற மனைவியின் ஆசையோடு தனது பிள்ளை தன்னைப்போல கஷ்டப்படக் கூடாது என்ற ரஹீமின் எண்ணமும் சேர்ந்து கொண்டபோது ரிஷ்வான் மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டான்.

ரிஷ்வான் நன்றாக படித்து வகுப்பில் ஒன்றாவது, இரண்டாவது என ரேங்க் வாங்கியபோது மகிழ்ச்சி அதிகமானது. எப்பாடுபட்டாவது மகனைப் படிக்க வைத்து பெரிய வேலையில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. ஆனால் நிதி நிலைமைதான் மிகவும் கஷ்டப்படுத்தியது. என்னதான் அன்றாடம் உழைத்தாலும் கடனுக்கு மேல் கடன் வாங்கிதான் நாட்களை கழிக்க முடிந்தது.

ஒவ்வொரு வருடமும் பள்ளி திறக்கும் நாட்களில் வட்டிக்காரனைத் தேடி அலைந்து வட்டிக்கு ரூபாய் வாங்கும் போது அடுத்த தடவை வட்டிக்கு வாங்கக்கூடாது என எண்ணிக் கொண்டுதான் வாங்கினான். ஆனால் அவனது எண்ணத்தையும் மீறி வட்டிக் கடன் அதிகரிக்கிறதே தவிர தீர்ந்தபாடில்லை. அன்றாடச்செலவுக்கே தனது தொழில் கைகொடுக்காதபோது அவ்வப்போது வரும் மருத்துவச் செலவு, குடும்பத்தில் வரும் திருமணம் போன்ற தேவைகளுக்கு வட்டிக்காரனை நம்பியே காலம் ஓடிக் கொண்டிருந்தது.

வட்டிக்காரன் நிரந்தர எதிரியாகவும் பிரிக்க முடியாத நண்பனாகவும் மாறி ரஹீமை அலைக்கழித்துக் கொண்டிருந்தான்.மகள் ஆயிஷாவும் முதல் இரண்டு வருடம் அதே பள்ளியில்தான் படித்தாள். நன்றாகவே படித்து வந்தாலும் ஏதோ காரணம் கூறி அருகிலிருக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டான். பையனை படிக்க வைக்கிறான்.

பெண்ணை கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல விட்டிருக்கான் என்ற உறவுக்காரர்களின் பேச்சுக்களுக்குக் காது கொடுக்கவில்லை. அதோடு ரிஷ்வானையும் பதினொன்றாம் வகுப்பில் வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான்.ஆனால் ரிஷ்வான் பத்தாம் வகுப்பில் 452 மார்க் வாங்கி பள்ளிக்கூடத்தில் இரண்டாவதாகத் தேர்ச்சி பெற்றபோது எல்லாம் மாறிப்போனது. எல்லோரும் கொண்டாடினர்.

பள்ளிக்கூடத்தில் அனைவரும் பாராட்டினர். நான்கு மார்க் கூடுதல் வாங்கியிருந்தால் முதல் மதிப்பெண் வாங்கியிருக்கலாம் எனப் பலரும் கூறியபோது மகனை நினைத்து பூரிப்படைந்தான்.ஆனால் எல்லாம் முடிந்து டிசி வாங்கச் சென்றபோது பள்ளிக்கூட முதல்வருக்குச் சற்று மனக்கலக்கம் உண்டானது. அதோடு அவர், ""நான் கரஸ்பாண்டன்ட்டுக்கிட்ட சொல்லி கொஞ்சம் பீûஸக் குறைக்கச் சொல்றேன்'' என்றார்.

அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க முடிவு செய்தான்.பள்ளிக்கூட முதல்வர் எழுதிக் கொடுத்த துண்டு காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு கரஸ்பாண்டன்டை பார்க்க காத்திருந்தான். டையும் பூட்ஸýம் போட்ட புத்தகக் கம்பெனி பிரதிநிதிகள் எல்லாம் பார்த்து சென்ற பிறகு ரஹீம் உள்ளே செல்ல அனுமதிக்கப் பட்டான். முதல்வர் கொடுத்த துண்டு சீட்டைக் கொடுத்தவுடன் மேலும் கீழும் பார்த்துவிட்டு ""ரிஷ்வான் அப்பாதானே?''என்று மட்டும் சொல்லிக்கொண்டு போனை எடுத்துப் பேசினார்.

பின்னர் ""நான் பிரின்சிபாலிடம் சொல்லியிருக்கேன். பையனை நல்லா படிக்கச் சொல்லுங்க. பிளஸ் டூல முதல் மார்க் வாங்கணும்'' என்று கனிவோடு கூறினார்.ஆபீஸில் வந்து பீஸ் கட்டபோனபோது 12 ஆயிரம் ரூபாய் கட்டச் சொன்னார்கள்.

கரஸ்பாண்டன்ட்டை பார்த்ததாகக் கூறியபோது ""ஆமா, பிளஸ் ஒன்னுக்கு 12 ஆயிரத்து எண்ணூறு பீஸ் எண்ணூறு குறைச்சிருக்கில்ல'' என்றபோது கரஸ்பாண்டன்டின் கனிவான பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசம் மலையாய் உயர்ந்தது.பீûஸக் கடன் வாங்கி கட்டி முடித்தான். பதினொன்றாம் வகுப்பு பாதி முடிந்த நிலையில் இனிமேல் பன்னிரண்டாம் வகுப்பு பாடம் எடுப்பதாகவும் அதற்குரிய நோட்டு புத்தகத்துக்கு இரண்டாயிரத்து நானூறு கட்ட வேண்டும் என்று கூறியபோது மீண்டும் வட்டிக்காரனைத் தேடினான் ரஹீம்.

நேற்று கிடைத்த நூற்று எண்பது ரூபாயையும் பழைய கடன் அடைக்க அவனுக்குத்தான் கொடுத்தான். அவனுக்கு மூன்று தவணை பாக்கி. அதைக் கொடுத்து முடித்தால்தான் அடுத்து பணம் தருவான். ஆனால் இன்று எப்படியாவது கையில் கிடைக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு மூவாயிரம் ரூபாய் வாங்கிவிட வேண்டும். மூவாயிரம் வாங்கினால்தான் ரிஷ்வானுக்கு பள்ளியில் கொடுக்க வேண்டிய இரண்டாயிரத்து நானூறு போக ஆயிஷாவுக்கு ஒரு செட் யூனிபார்ம் எடுக்கமுடியும்.

ஒரு செட் துணியை வைத்துக்கொண்டு தினமும் போட்டு வருவதால் அது சுருண்டு போய்க் கந்தலாகக் கிடக்கிறது. மீதி ரூபாய்க்கு இன்றைக்கு ஒரு நாளாவது நல்ல மீன் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் மனத்தில் ஓடிக் கொண்டிருக்க ஆக்கர் கடைக்கு வந்து சேர்ந்தான்.கடையில் முதலாளியில்லை. அவருடைய மச்சான்காரன்தான் இருந்தான். இவன் இப்ப ஆயிரம் குத்தஞ்சொல்லி உள்ளதையும் இல்லைன்னு சொல்லப் போறான் என வாயில் முணுமுணுத்துக் கொண்டே சைக்கிளை ஓரமாக ஒதுக்கி நிறுத்தினான். ஒவ்வொரு சாக்குப்பையாக கீழே இறக்கி கைபார்த்து பொருட்களைத் தனித்தனியாக பிரிக்கத் தொடங்கினான்.

இதற்குள்ளாகக் கடைக்கு வந்த முதலாளி ""என்ன நேரத்தோடு வந்துட்ட? நல்ல கொய்த்தா?'' எனக் கேட்டுக் கொண்டே தராசுக்குப் பக்கத்தில் இருந்த, உடைந்து ஒட்டு போட்ட நாற்காலியில் உட்கார்ந்தார். தராசு தட்டிலிருந்து எடைக்கற்களை எடுத்து கீழே வைத்துவிட்டு தூசுகளை தட்டிவிட்டு எடைக்கற்களை மீண்டும் தராசு தட்டில் அடுக்கிக் கொண்டிருந்தார். மச்சான்காரன் எழுந்து வீட்டுக்கு சாப்பிடுவதற்காகப் போனான்.

யாரோ ஒருவரை வண்டி இடித்துவிட்டதாக கூறிக்கொண்டுச் சென்றனர் மேற்கு தெரு பையன்கள். அவர்கள் பள்ளிக்கு போகாமல் கிரிக்கெட் மாட்ச் முடித்து திரும்பிக் கொண்டிருந்தனர். அதனை காற்றோட்டச் செய்தியாக கேட்ட ரஹிம் பொருட்களை கைபார்ப்பதில் கவனத்தை செலுத்தனார்.பின்னர் சற்று நேரத்தில் அங்கு வந்த பக்கத்துக் கடை முதலாளி ""சாலி ஏதோ ஒரு பையன ஸ்கூல் பஸ் இடிச்சிச்சாம் உனக்கு தெரியுமா யாரு''ன்னு எனக் கேட்டுக் கொண்டே வந்தார். ""எப்பவாம்...'' என்ற கேள்விக்கு ""இப்பத்தான் சொல்றாங்க... வேற எதுவும் தெரியல. எனக்க மோன் சையது வீட்டிலதான் இருந்தான் போய்பாத்துவரச் சொல்லி அனுப்பினேன்'' என்று முடித்தார்.

அவர்களது பேச்சு தொடர்ந்தது. ரஹீம் ஆக்கரை பிரித்து தனித்தனி சாக்குகளில் வைத்து தராசு தட்டில் வைக்க முதலாளி எடை போட்டு பழைய பேப்பரில் குறித்துக் கொண்டிருந்தார். எல்லா ஆக்கர் பொருட்களையும் எடைபோட்டு முடித்தபின்பு தனது பைகளை மடக்கி டிரங்கு பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த போது முதலாளி ""ரஹீமு இன்னக்கி உனக்கு கோளூதான். எண்ணூத்து நாப்பது ரூபாய் தேறியிருக்கு'' எனக் கூறியபோது சற்றே மகிழந்தான் ரஹிம்.இன்றைக்கு வட்டிக்காரனிடம் முன்னூறு ரூபாய் கொடுத்து மூவாயிரம் ரூபாய் மீண்டும் வாங்கிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டே முதலாளி கொடுத்த ரூபாயை வாங்கிக் கொண்டு சைக்கிள் ஸ்டாண்டை எடுத்து உருட்டத் தயாரானான்.

அப்போது சாலி கையிலிருந்த செல்போன் ஒலித்தது.அவருடைய மகனிடமிருந்து வந்த அழைப்பில் சாலி பேசினார். ""லே யாருன்னு சொன்ன நம்ம ஆக்கர் ரஹீமின் மோனா...'' எனக் கேட்டுக் கொண்டே ஃபோனை ஸ்பீக்கரில் போட்டார். எதிர் முனை குரல் தற்போது கேட்டது. ""ஏதோ பீஸ் கட்டலைன்னு ஸ்கூல்லண்டு வெளிய போகச் சொன்னாங்களாம்... இவன் வெளிய வந்தப்போ ஸ்கூல் பஸ்தான் இடிச்சிருக்கு. டயருக்கு அடியில தலை மாட்டிருக்கு. வண்டிய பின்னுக்கு தள்ளி இப்பத்தான் பிரேதத்த வெளிய எடுக்கிறாங்க. பிரேக் இல்லியோ என்னமோ பஸ் ஸ்கூல் காம்பவுண்டில இடிச்சி நிக்குது.''

இதனை கேட்ட ரஹிம் மூர்ச்சையாகி சாலையில் சாய்ந்தான். அவனது உழைப்பின் ஆதாரமான சைக்கிள் மறுபுறம் சரிந்தது.

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இந்த கதையை கல்கியில் படித்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது.
    //கரஸ்பாண்டன்டின் கனிவான பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசம் மலையாய் உயர்ந்தது//
    அருமை. உலவு 'ல் என்னுடைய ஒரு ஓட்டு உங்களுக்கு.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ... தொடரட்டும், பதிவுகள்..

    ReplyDelete
  4. சூப்பராயிருக்கு!!

    தொடர்ந்து கலக்குங்க!

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாழ்க்கையையும், மனிதர்களையும் கண்முன் நிறுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete