Friday, December 24, 2010

இன்று 2 வது நாளாக ராசாவிடம் சி.பி.ஐ., விசாரணை...


தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜாவிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் இன்றும் (சனிக்கிழமை) 2 வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். ஏற்கனவே நேற்று 9 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணைக்காக ராஜா சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜரானார். தனது உடல்நலம் கருத்தில் கொண்டு அவரது டாக்டருடன் ராஜா வந்தார்.


ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை அவரிடம் சரமாரியாக கேட்டனர். ஆதாரங்களை முன்கூட்டியே திரட்டி வைத்து கொண்டு, அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியதால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இன்னும் பல விஷயங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பாக எழுந்த சர்ச்சையால், கடந்த மாதம் பதவியை ராஜினாமா செய்த ராஜாவுக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 160ன் கீழ் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை ஏற்ற ராஜா, கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து டில்லி சென்றார். நேற்று காலை 10.30 மணிக்கு அவர், சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகினார். 10.45 மணிக்கு அவரிடம் அதிகாரிகள் கேள்விகளை கேட்க துவங்கினர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாகவும், கம்பெனிகளின் தொடர்பு அதிகாரியாக செயல்பட்ட வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவன தலைவர் நிரா ராடியாவுடனும் தொலைபேசியில் பேசிய பேச்சுக்கள் குறித்தும், சில தொலைத்தொடர்பு கம்பெனிகளுக்கு விதிமுறைகளை மீறி சாதகமாக செயல்பட்டது குறித்தும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முன்தேதியிட்டு சிலருக்கு லைசென்ஸ் வழங்கியது,


தொலைத்தொடர்பு கம்பெனிகளுக்கும், ராஜாவின் உறவினர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்கப்பட்டன.ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சேகரிக்கப்பட்டிருந்த தகவல்கள் அடிப்படையில், நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விசாரணைக்குப் பின், பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் யார் யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது? கேள்விக் கணைகளால் ராஜாவை திணறடித்த சி.பி.ஐ.,

தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்ட கேள்விகள் என்னென்ன? அதற்கு அவர் அளித்த பதில்கள் என்ன? என்பது தொடர்பாக பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன் விவரம் வருமாறு
:"2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சராக இருந்த ராஜாவை மையமாக வைத்து, தங்களது அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பம் முதலே சி.பி.ஐ., அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜாவுடன் தொடர்பில் இருந்த உயர் அதிகாரிகள், இடைத்தரகர்கள், உறவினர்கள் மற்றும் பினாமிகள் என, அவரைச் சுற்றியிருந்த பலரையும் வளைத்து சோதனை நடத்தி, ஏராளமான ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளனர். இந்நிலையில், கடைசியாக ராஜாவை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியதையடுத்து, நேற்று அவர், சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜரானார். கடந்த புதன் கிழமை இரவே, சென்னையிலிருந்து டில்லிக்கு வந்து சேர்ந்து விட்ட ராஜா, நேற்று முன்தினம் முழுக்க தனது வீட்டிலேயே ஓய்வில் இருந்தார்.

நேற்று காலை 9.45 மணியளவில் தனது வீட்டை விட்டுக் கிளம்பிய அவர், டில்லி சி.ஜி.ஓ., காம்ப்ளக்ஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.ராஜா வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்து சி.பி.ஐ., அலுவலகம் வந்து சேரும் வரை, மீடியாக்கள் அவரது காரை விடாமல் துரத்திச் சென்று கொண்டே இருந்தன. சி.பி.ஐ., அலுவலகத்திற்குள் 10.30 மணியளவில் ராஜா நுழைந்தார். சி.ஜி.ஓ., காம்ப்ளக்ஸ் என்பது மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்கள் மற்றும் அலுவலகங்கள் உள்ள இடம்.விசாரணைக்காக ராஜா வருவதையடுத்து குவிந்த மீடியாக்கள் காரணமாக, அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மொத்தம் நான்கு தளங்களைக் கொண்ட சி.பி.ஐ., அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில், ராஜாவிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.


ராஜாவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய விசாரணை குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
ராஜாவிடம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டுமென்பதை சி.பி.ஐ., அதிகாரிகள் தயாரித்து வைத்திருந்தனர். அந்த வகையில், 100 கேள்விகள் வரை தயார் செய்து வைத்து, ராஜாவிடம் துருவித் துருவி விசாரித்தனர். லைசென்ஸ்கள் அளிப்பதில் நடந்த முறைகேடு, அவற்றின் மூலம் வந்த பணம் மற்றும் அந்த பணம் எங்கெல்லாம் சென்றுள்ளது என்ற முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை விருப்பம் போல சில கம்பெனிகளுக்கு அளிக்க வேண்டியதற்கான காரணங்கள் குறித்தும், அதற்காக தேதி மாற்றம் செய்ததன் பின்னணி, ஒரே நாளில் மிகப்பெரிய தொகைக்கு வரைவோலை எடுக்கப்பட்டதன் மர்மம் குறித்தும் கேள்விகள் இருந்தன.


ராஜாவின் உறவினர்கள் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைக்கப் பெற்ற ஆவணங்களை ஆதாரமாக வைத்து பெரும்பாலான கேள்விகள் இருந்தன. தவிர, இடைத்தரகர் நிரா ராடியாவுடனான உறவு, ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ராடியா மூலமாக நடத்தப்பட்ட பேரங்கள், இதில் சம்பந்தப்பட்ட பிற நபர்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.வெளிநாடுகளுக்கு ஹவாலா மூலமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட விதம் குறித்தும் கேட்கப்பட்டன. ராஜாவின் டில்லி வீட்டில் நடந்த சோதனையின் போது, ஸ்பெக்ட்ரம் குறித்த தொலைத்தொடர்புத் துறை ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டன.

குறிப்பாக பிரதமருக்கும், ராஜாவுக்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்தின் போது பிரதமர் தரப்பில் எழுதப்பட்டிருந்த அரசாங்க ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ராஜினாமாவுக்கு பிறகு தான், ராஜா வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. பதவியை ராஜினாமா செய்த பிறகும் கூட, அந்த முக்கியமான அரசு ஆவணங்களை வீட்டில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்தும் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.


அதிகாரிகள் தரப்பில் இவ்வாறு கேட்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான கேள்விகளுக்கான பதில்களை ராஜா தயார் செய்து கொண்டு வந்திருந்ததாக தெரிகிறது. டில்லிக்கு கிளம்புவதற்கு முன், சென்னையில் அரசினர் தோட்டத்தில் தங்கியிருந்தபோதே இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., கிளப்பும் சிக்கலான கேள்விகளுக்கு என்ன மாதிரியான பதில்களை அளிக்க வேண்டுமென்பது குறித்து திறமை வாய்ந்த வக்கீல்களைக் கொண்ட குழு, ராஜாவுக்கு அறிவுரை வழங்கி அனுப்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.ராஜாவிடம் மதியத்திற்கும் மேலும் விசாரணை தொடர்ந்ததால், மதிய உணவு வெளியிலிருந்து வாங்கி வரப்பட்டு ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

சரி அதெல்லாம் இருக்கட்டும். ராசாவுக்கு உறுதுணையாக ஏன் டாக்டர் கூடவே வந்தார். ஏதோ படத்தில் வந்தது போல திடீர் என்று நெஞ்சு வலி என்று சொல்வார் போல. யாருக்கு தெரியும் இன்றைய விசாரணையில் தெரியும். பொறுத்திருந்து பாப்போம்.

நன்றி: தினமலர்.

உங்கள் கருத்துகளை எதிர்நோக்கி இங்கே கமெண்ட் கள் காத்திருக்கின்றன..

1 comment:

  1. இதெல்லாம் வெறும் கண் துடைப்புதான்...

    ReplyDelete