Friday, September 3, 2010

உங்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் ரோபோ!




இன்றைய சூழலில் வேலை… வேலை… என்று எந்திர கதியில் இயங்கும் மனிதன் சீக்கிரமே களைப்படைந்து விடுகிறான். ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. சிக்கலான இத்தகைய நேரங்களில் உங்களுக்குப் பதிலாக (பினாமி போல) ஆஜர் ஆகப்போகிறது இந்த ரோபோ. இதைப் பயன்படுத்தி உங்கள் வேலைகளைச் செய்ய வைக்கலாம்.



நீண்ட நேரம் நடக்கும் கூட்டங்களில் இந்த ரோபோவைக் கலந்து கொள்ளச் செய்து தேவையான விவரங்களைப் பெறலாம். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் செய்து வீடியோ கான்பரன்ஸ் முறையில் உறவுகளிடம் நட்பு பரிமாறிக் கொள்ளலாம். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த ரோபோவை இயக்க முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. கலிபோர்னியாவின் சிலிகான் வேலி பகுதியில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.



போப் கிறிஸ்டோபர் என்பவர் இதை உருவாக்கி இருக்கிறார். க்கி.பி. ரோபோ (Q.B. Robot) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பதற்காக இந்த ரோபோவில் பல சிறப்பு வசதிகள் இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கது இந்த ரோபோவின் உயரம். சாதாரணமாக 3 அடி உயரத்தில் இருக்கும் ரோபோ ஒரு வேலையைச் செய்யும்போது (தேவைப்பட்டால்) தன் உயரத்தை கழுத்தை நிமிர்த்துவதன் முலம் 5.7 அடியாக உயர்த்தி பணியை செய்து முடிக்கும்.



கண்கள் போல பார்க்கும் திறனுக்காக 5 எம்.பி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நெற்றி இருக்கும் இடத்தில் சிறு திரை உள்ளது. இதில் உங்கள் (உரிமையாளர்) படம் தெரியும். இதன் முலம் கான்பரன்ஸ் முறையில் பேச முடியும். காதுபோல கேட்கும் வேலையைச் செய்ய 3 மைக்ரோபோன்கள் உள்ளன. வயரில்லா தொழில்நுட்பத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் வீட்டில் இருந்து செல்போன், கணினி முலம் தொடர்பு கொள்ளலாம்.



கான்பரன்சிங் முறையில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும், ஒரு வேலையை செய்ய வைக்கவும் முடியும். பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழில் அதிபர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த ரோபோ வசதியாக இருக்கும். இதன் விலை சுமார் 7 லட்சம் ருபாய்.

No comments:

Post a Comment