Friday, September 3, 2010

டைனோசர் போய் ஆப்பிள் வந்தது டும் டும் டும்



வெலிங்டன்: எல்லா பழங்களும் சத்து நிறைந்தது என்றாலும் ‘கவுரவ’ பழமாக மதிக்கப்படுவது ஆப்பிள். சம்பள தேதியை ஒட்டித்தான் வாங்க முடியும் என்றாலும் அதன் சுவை அலாதியானது. இதன் ஜீன், அதன் தோற்றம் பற்றி இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன. நியூசிலாந்தை சேர்ந்த தாவர மற்றும் உணவு ஆராய்ச்சி நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்த தகவல்கள்:

பூமியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மெகா விலங்கு டைனோசர். கூட்டம் கூட்டமாக இந்த உலகில் சுமார் 16 கோடி ஆண்டுகள் உலா வந்திருக்கின்றன. 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள்.. பிரபஞ்சத்தில் இருந்து சென்னை நகரத்தில் பாதி சைஸ் இருக்கிற மெகா கல் ஒன்று பயங்கர வேகத்தில் பூமியில் மோதுகிறது.

வளிமண்டல ஏரியாவில் கல் நுழைந்ததுமே பூமியின் வெப்பநிலை எகிறுகிறது. அடுத்த கணத்தில் பயங்கர வேகத்தில் அந்த கல் விழுந்ததில் தாறுமாறான மாற்றங்கள் நடக்கின்றன. காஸ்மிக் கதிர்கள் மற்றும் பயங்கர வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் டைனோசர் வகையறா உயிரினங்கள் அத்தனையும் ஒட்டுமொத்தமாக கருகி சாகின்றன. அப்போது பொசுங்கிய டைனோசர்களின் படிமங்கள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக தற்போது கிடைக்கின்றன.

இப்போது ஆப்பிள் கதைக்கு வருவோம். கல் விழும் சம்பவத்துக்கு முன்பு வரை ஆப்பிள் என்பது சாதாரண புதர்ச் செடி போலத்தான் இருந்திருக்கிறது. கல் விழுந்து அதிக வெப்பம் மற்றும் கதிரியக்க கதிர்கள் வெளியேறியதில் ஆப்பிள் மூதாதைச் செடியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் அவற்றின் ஜீன்களில் கன்னாபின்னாவென மாற்றங்கள் நிகழ்கின்றன. இடைச்செருகலாக ஏகப்பட்ட மரபணுக்கள் சேர்ந்ததில் புது தெம்பு பெறுகிறது அந்த செடி. எந்த சூழலையும் தாங்குவதற்கு ஏற்ப வலுவான, பெரிய மரமாக மாறுகிறது.

அதுவரை சாதாரணமாக இருந்த பழம் புது சுவையும் அதிக சாறுத்தன்மையும் பெறுகிறது. ஸ்டிராபெரி, ராஸ்பெரி போன்றவையும் ஆப்பிள் வகையை ஒட்டியதுதான். ஆனால், எங்கிருந்து ஆப்பிளுக்கு மட்டும் இவ்வளவு அற்புதமான ருசியும் சாறும் கிடைத்தது என்ற சந்தேகம் இப்போது தீர்ந்திருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சராசரியாக 5.5 கோடி டன் விளைகிறது. உற்பத்தியில் சீனா, அமெரிக்காவை தொடர்ந்து உலக அளவில் 6&வது இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆப்பிள் தோன்றியது கஜகஸ்தான் மலைப்பகுதி என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment