Saturday, September 4, 2010
அகலுமா அரசு மருத்துவமனைகளின் அவலம்?
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முதல் நகர்ப்புறங்களில் உள்ள பொது மருத்துவமனை வரை தமிழகத்தில் 800க்கும் (தோராயமாக) மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. இவைகளில் எத்தனை மருத்துவமனைகள் நல்ல வசதியுடன் செயல்பட்டு வருகின்றன என்பது கேள்விக்குறிதான்.
கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு செவிலியர் மட்டுமே உள்ளார். அவர் காலை 9 மணிக்கு அருகில் உள்ள (குறைந்தது 5 கிலோ மீட்டர்) அரசு மருத்துவமனைக்கு சென்றால், பிற்பகல் 4 மணிக்குத்தான் வருவார். அப்போது சுகாதார நிலையத்தை பார்த்தவுடன் செவிலியர் கோபம் அடைந்து விடுவார். காரணம், மாத்திரைக்காக காத்திருக்கும் அப்பாவி மக்களை பார்த்துதான்.
''இப்போதுதான் வந்துள்ளேன்; ஒரு மணி நேரம் கழித்து வாருங்கள்'' என்று பொதுமக்களை பார்த்து தனது கோபத்தை வெளிப்படுத்துவார் செவிலியர். காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், “தங்களுக்கு ஏன் இந்த நிலைமை?” என்ற ஆதங்கத்துடன் சென்று ஒரு மணி நேரம் கழித்து வருவார்கள்.
அப்போதும் செவிலியர் நோயாளிகளை பார்த்து எரிச்சல் அடைவதும், கோபப்படுவதும் நடக்கத்தான் செய்கிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுகாதார நிலையங்களிலும் இதே நிலைதான்!
கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர்தான் கர்ப்பிணி பெண்களுக்கு வாங்கிக் கொடுக்கிறார். அந்த பணத்தில் 1000 ரூபாய் தமக்கு தந்தே தீர வேண்டும் இல்லை என்றால் 6 ஆயிரம் ரூபாய் வாங்கித் தரமாட்டேன் என்று முதலிலேயே அந்த ஏழை கர்ப்பிணி பெண்களை பயமுறுத்தி வைத்துக் கொள்கிறார் செவிலியர்.
அதோடு கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்தே அரசு சார்பில் மாதம் 750 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. இது பற்றி கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்ல, கிராமப் பெண்களுக்குகூட தெரிவதில்லை. இதனை செவிலியர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கர்ப்பிணி பெண் வாங்குவது போன்று பணத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் சிகிச்சைக்கு என்றால், அங்கு நடக்கும் அலைகழிப்பை சொல்லிமாளாது.சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனி வார்டு உள்ளது.
அந்த வார்டுக்கு சென்றால் கொடுமையோ கொடுமை. அவ்வளவு சுகாதார கேடு நிலவுகிறது இன்று வரை. அவர்களுக்கு கொடுக்கப்படும் சாப்பாடு, கைதிகளுக்கு கொடுப்பதுபோல் கொடுக்கப்படுகிறது.
அங்குள்ள மகப்பேறு பிரிவில், “தங்கள் மகளுக்கு எப்போது குழந்தை பிறக்கும்; தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்களா?” என்று அந்த பெண்களின் தாயோ, தந்தையோ யாரிடம் கேட்க வேண்டும்? - மருத்துவரிடம்! ஆனால் அங்கு அப்படி இல்லை. அங்குள்ள வார்டு பாயிடம்தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதுவும் எப்படி? பணம் கொடுத்துதான் அந்த தகவலை பெற்றோர்கள் பெற முடியும். பணம் கொடுக்க மறுத்தால் அவ்வளவுதான். தகவலே கிடைக்காது. பெற்றோர்கள் தவமாய் தவம் கிடக்க வேண்டியதுதான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment