Sunday, September 5, 2010

எனது ஆசிரியர் தினம்


ஒவ்வொரு ஆண்டும் புரட்டாதி மாதம் ஐந்தாம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை எண்ணி ஆண்டு பிறந்ததிலிருந்து காத்திரிருந்த பாடசாலை நாட்கள் மிகவும் அற்புதமானவை. என்னவென்றால் அன்று மட்டும் பாடசாலையில் நாங்கள் பெரியவர்கள் போலும் ஆசிரியார் சிறியவர்கள் போன்றும் ஒரு மாயை தோற்றம் காணப்படும். அதற்காக மாணவர்களாகிய நாம் எங்களை பெரியவர்கள் என்று வியக்கவில்லை. ஆண்டில் ஒரு நாள் அன்று மட்டும் எமது கட்டளைக்கு அவர்கள் பணிவார்கள். அதாவது இன்றைக்கு நீங்கள் இந்த நிகழ்ச்சி செய்ய வேண்டும்ம். நாங்கள் அணிவித்த மாலையுடன் நிகழ்ச்சி முடியும் வரை மேடையில் இருக்க வேண்டும். எங்களுடன் நின்று படம் எடுக்க வேண்டும். இப்படியான எமது செல்லக்கட்டளைக்கு அவர்கள் பணிந்தே ஆகவேண்டிய ஒரு நாள்.

எல்லா ஆசிரியர்களும் புது புடவை கட்டி தலைக்கு பூ வைத்து அதை விட நாங்கள் எமக்கு விரும்பிய ஆசிரியர்களுக்கெல்லாம் எமது வீட்டில் அல்லது பக்கத்து வீட்டிலிருந்து கெஞ்சி கெஞ்சி வாங்கிய பூக்கள் என்று அவர்களுக்கு கொடுப்போம். அன்று அவர்கள் முகத்தில் புன்னகையை தவிர ஒன்றையுமே காணமுடியாது. அத்தோடு அன்று எமக்கு ஆசீர்வாதம் வழங்குவதுடன் நாமும் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்குவோம். வகுப்பறையின் சார்பாக சிறிய நல்ல வசனங்கள் பொறிக்கப்பட்ட பரிசுகள் புடவைகள் என்று எல்லாம் எடுத்து கொடுப்போம். அவர்களும் ஆளுக்கொரு இனிப்பு பண்டத்துடன் (சொக்லட் அல்லது சாக்லட்) எங்கள் வகுப்புக்கு வந்து எல்லோருக்கும் பரிமாறுவார்கள். பாடசாலையின் இனிப்பான நாட்களில் இதுவும் ஒன்று.

மூன்று வயதில் இந்திரா ஆசிரியர் தொடக்கி வைத்த பாலர் வகுப்பு கல்வி கடைசியில் பல ஆசிரியர்களின் துணையோடு முடிந்தது. இன்று நான் நினைவில் வைத்திருக்கும் என் அபிமானத்துக்குரிய ஆசிரியர்கள் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் படிப்பித்த ஆசிரியர் பாமா. இவர் எனது அம்மம்மாவுடன் படித்து அம்மாக்கு படிப்பித்தவுடன் எங்கள் அப்பா ஆசிரியர் என்றதால் அவருடன் சக ஆசிரியராகவும் இருந்ததால் என்னில் கொஞ்சம் அக்கறை எடுப்பர். சின்ன வயதில் ஆங்கிலத்திலும்ம் கொஞ்சம் திறமைசாலி. அதன் பிறகு தனலட்சுமி ஆசிரியர் இவர் தமிழாசிரியர். பெரும்பாலும் தற்பொழுது கடைசி யுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பார். மற்றையது சாதாரண தரம் உயர்தரம் படிப்பிக்கும் போது தமிழ் இராஜேஸ்வரி, நிறைமதி ஆசிரியர்கள். இதில் இராஜேஸ்வரி ஆசிரியர் பணிமாற்றம் கிடைத்து பாடசாலையை விட்டு போனாலும் ஒவ்வொரு ஆசிரியர் தினத்துக்கும் பரிசுடன் அவரின் வீட்டிற்கு போக மறக்கமாட்டோம். குறிப்பாக ஜெலா ஆசிரியர் எங்கள் பாடசாலை மகளீர் கல்லூரியாக இருந்தாலும் எல்லோரையும் "என்னடா செய்றாய்" என்று ஆண்பிள்ளைகளை அழைப்பது போல் அழைப்பார் அத்தோடு அடியும் விழும். அத்தோடு வகுப்பறைக்கு வந்தால் என்னையும் இன்னுமொரு இரண்டு ரூபாய் என்ற எனது நண்பியையும் கேள்வி கேட்டு எழுப்பி விட்டிடு தான் படிப்பிப்பார். சின்னன்ல இருந்து இரண்டு பேரும் அவாட படிச்சதால் இருந்த அக்கறை. அந்த பாடம் வந்தாலே இரண்டு ரூபாய் சொல்லத் தொடங்கிடும் எழும்பி நிற்பம் நாங்கள் இரண்டு பேரும் என்று நக்கலாக. அதை விட சமயப்பாடத்திற்கு வசந்தி ஆசிரியர் அவர் வந்து குறிப்பு எழுத சொல்லி குறிப்பை சொல்லி கொண்டிருப்பா பெரும்பாலும் எல்லாரும் எழுதுவார்கள் நாங்கள் தங்கிலிஸ் எனும் மொழியில் எழுதுவம். (அதாவது தமிழை ஆங்கிலத்தில்) அதுவும் விட்டு விட்டு எழுதுவம். நரி எனும் என் நண்பி நல்லா நித்திரை கொண்டிருவாள். ஆசிரியர் நிமிர்ந்து பார்த்தால் என் நண்பிக்கு அடிபோட்டு எழுப்பவேண்டும். அடிபோட்டும் ஆழ்ந்த நித்திரையிலிருந்த நாட்களில் ஆசிரியரின் பிரம்படிக்கு எழும்பியிருக்கிறாள். பொதுவாக சமய பாடம் என்றால் அவள் எழும்பி நிற்பாள். இதை விட சில வேளைகளில் எழுந்து கொப்பிய (note book) தலைகீழா வைச்சு எழுதுவாள். மொத்ததில் பாடசாலையில் படிப்பில் அலட்சியமாக விளையாட்டு தனமாக இருந்த ஒரு குழு நாங்கள்.

இதைவிட கொடுமை என்ன என்றால் பாடசாலையில் தான் இப்படி என்றால் மாலை நேரங்களில் கல்வி நிலையங்களிலும் குசும்பு தான். நித்திரை கொள்ளமாட்டம். கடைசியில் தான் எப்பவும் இருப்பம். ஆசிரியர் கேள்வி கேட்டா சொல்ல மாட்டம். எங்களை நீங்கள் படிக்கவா இங்க வருகின்றீர்கள் என்று கூட கேட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஒரு குழப்படி. ஆனால் எங்களுக்குள் ஒரு எண்ணம் இருந்தது. அது என்னவெனில் இந்த ஆசிரியர்கள் நாங்கள் படிப்பம் என்பதை நம்பவில்லை. இவர்கள் நம்பிக்கை வைத்திருந்தது வகுப்பில் முன்னுக்கு இருப்பவர்களை. இதை முறியடிக்க வேண்டும். இறுதிப்பரீட்சையில் நாங்கள் நல்ல பெறுபேறு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் கடைசியில் அவ்வாறே நடந்தது.

அது மட்டுமல்ல பாடசாலையில் ஆசிரியர் தினக்கொண்டாட்டம் என்றால் வகுப்பறையில் இருக்கும் என்னை மாதிரி இருக்கும் என் நண்பர்கள் பலருக்கும் கொண்டாட்டம் என்னவென்று கேட்கிறீங்களா? அன்று தான் நாங்கள் பாடசாலையில் ஆசிரியர்களிடம் பேச்சு (திட்டு) வாங்காத நாள். ஏனென்றால் அவர்கள் அன்று திட்டமாட்டர்கள் என்பதால் தான். மேசைக்கு மேல் ஏறியிருந்து பாட்டு பாடி மேளம் தட்டிறதும் "கூ" அடிக்கிறதும் அன்று தான் வீதியில் போறவர்கள் இது பெண்கள் பாடசாலையா? என்றொரு கேள்வி கேட்கும் நாளாக இருக்கும். என் நண்பியில் ஒருத்தி நல்லா மிருதங்கம் வாசிப்பாள். பாடுவதற்கு நல்ல குரல் யாருக்கும் இல்லாவிட்டாலும் சும்மா முழுதா தெரிந்த ஒரு பாட்டு குத்து பாட்டு அல்லது தெரியாத பாட்டுகள் எல்லாம் சேர்ந்த ஒரு புதுப்பாட்டு நாமே வரிகள் எழுதினவர்கள் போல் வரும். மொத்தத்தில் அந்த மிருதங்கம் வாசிப்பது மட்டுமே இனிமையாக இருக்கும் மீதியெல்லாம் எதோ நாய்கள் நரிகள் கத்துவது போலவும் இருக்கும். ஆனால் அதில் எங்களுக்கும் ஒரு சந்தோசம். அதை விட நடனம் ஆடத்தெரிந்தவர்களை பக்கத்து வகுப்பறையிலிருந்து கூட்டி வந்து ஆடசொல்லி பார்க்கிறது என்று அதுவும் ஒரு கொண்டாட்டம்.

இதில் இன்னொரு விசயம் என்ன என்றால் என் நண்பிகளிற்கு நாம் வைத்த புனைப்பெயர் நரி, அடைக்கோழி, நாய், 2 ரூபாய், சேவல் என்பன. அதில் எனக்கு கிடைத்த பட்டம் கோன் ஐஸ் கிரீம். இவ்வளவு மிருகங்களும் சேர்ந்து ஒரு கச்சேரி பாடசாலையில் நடந்தது என்றால் யோசித்து பாருங்கள். இது ஒன்றும் மேடையிலில்லை எமது வகுப்பறையில் நாங்கள் மட்டுமே பெரும்பாலும் இருப்பம் மீதி பேர் பொழுது போகாட்டி அல்லது தங்களது வகுப்பறையில் யாரும் அன்று பாடசாலைக்கு வராமல் தனிமையிலிருந்தால் எமது கச்சேரியில் பார்வையாளர்களாக இருப்பார்கள்.

கடைசியில் ஆசிரியர்களுக்கான விழா ஒரு மணியளவில் ஆரம்பமாகும். அதற்கு ஒழுங்குகள் செய்துவிட்டு போய் இருக்க வேண்டியதுதான். எல்லாம் முடிய எழும்பி வந்து வீட்டுக்கு போகிறது தான் எமது வேலை. மொத்ததில் வெளி வீதிகளிலோ வேறு யாருடனுமோ குசும்புகள் விடமாட்டம். எங்கட வகுப்பறை எங்கட நண்பிகள் என்ற வட்டத்திற்குள் தான் எமது அட்டகாசம். ஆசிரியர்களை கொண்டாடும் மாணவ பருவம் ஒரு இனிய பருவம்.

நன்றி webdunia.com

No comments:

Post a Comment