Wednesday, September 1, 2010

விரும்பினால் மழை வரும்!



விஞ்ஞானம் ஏற்கனவே செயற்கை மழை பெய்விக்கும் முறையை கண்டுபிடித்திருந்தது. குறிப்பிட்ட அளவில் பெரிதான இயற்கை மேகத்திரள் இருந்தால்தான் இந்த முறையில் மழை பெய்விக்க முடியும். தற்காலத்தில் காலம் தவறி பெய்துவரும் மழை, தண்ணீரின் அவசியத்தை நன்கு உணர வைத்திருக்கிறது.



எனவே விரும்பிய நேரத்தில் மழையை வரவழைக்க வேறு வழி உண்டா? ஆராய்ந்த விஞ்ஞானிகள் தற்போது முக்கியக் கட்டத்தை எட்டி உள்ளனர். அதாவது செயற்கையாக மேகத்தை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் மழையை விரும்பும் நேரத்தில் வர வழைக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.



சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. அவர்கள் ஆய்வகத்தில் மேகத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இதற்காக மைனஸ் 24 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நீர் நிரம்பிய கொள்கலன் வழியாக அகச்சிவப்புக் (இன்பிராரெட்) கதிர்களைச் செலுத்தினார்கள். அப்போது நீர்த்திவலை ஆவியாகி மேகம் உருவானது.



இதை சாதாரண கண்களாலும் பார்க்க முடிந்தது. ஆய்வக நிலையில் மட்டுமல்லாது வெளிப்பரப்பிலும் இந்த சோதனை வெற்றி பெற்றது. ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஜெரோம் காஸ்பாரியன் கூறியதாவது:-



லேசர் கதிரானது அணுக்களில் உள்ள எலக்ட்ரானை ஒடுக்குவதன் முலம் `ஹைட்ராக்சைல்’ என்ற வேதிப்பொருள் அதிகஅளவில் உருவாவதை ஊக்குவிக்கிறது. இது தொடர்ந்து வினைபட்டு சல்பர் மற்றும் நைட்ரஜன்-டை-ஆக்சைடு உருவாகிறது.



இதுபோன்ற நிகழ்வுகளால் நீர் முலக்கூறுகள் அடர்த்தி குறைந்து நீராவி நிலைக்குச் சென்று மேகம் உற்பத்தியாகிறது. இதை கண்கூடாகப் பார்க்கலாம். எங்கள் ஆய்வில் விண்வெளியில் 60 மீட்டர் உயரத்தில் மேகம் உருவாக்கிக் காட்டப்பட்டது.



50 மைக்ரோமீட்டர் (ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கு என்பதுதான் மைக்ரோமீட்டராகும்) அகலமுள்ள நீர் முலக்கூறு அடர்த்தி குறைந்து ஆவியாகும்போது 80 மைக்ரோமீட்டராக விரிவடைகிறது. எனவே குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி அதிகமாக மேகத்திரளை ஏற்படுத்த முடியும்” இவ்வாறு அவர் கூறினார்.



இனி, வள்ளுவன் வாக்குபோல “பெய்” என்க… பெய்யும் மழை!

No comments:

Post a Comment