சென்னை போன்ற பெருநகரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதரணம்தான் என்ற போதும் என் மனத்தினை உறுத்திய நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நிகழ்வு - 1 : இது சமீபத்தில் நடந்த நிகழ்வு. நான் அலுவலகத்துக்கு தினமும் பேருந்தில் செல்லுவதுதான் வழக்கம். 2 தினங்களுக்கு முன்னரும் அப்படித்தான் பேருந்தில் ஏறினேன். கூட்டம் மிகுதியால் பயணசீட்டு எடுப்பதற்கு 5 ரூபாய் பணத்தை பெண்மணி ஒருவரிடம் கொடுத்து அனுப்பினேன் (கூட்ட நெரிசலில் பேருந்து பயணத்தில் சிலர் உதவி மனப்பாண்மையோடு கொடுத்தனுப்பி டிக்கெட் வாங்கிக் கொடுப்பது நல்ல ஒரு விஷயம்) அந்த நேரத்தில் நிறைய நபர்கள் கொடுத்தும் வாங்கியும் கொண்டிருந்தனர். எனது சீட்டு தவறுதலாக என்னை கடந்து முன்னாடி நின்றவர்களிடம் கொடுத்துவிட்டார்கள். வாங்கியவர்களில் ஒருவர் காசு கொடுக்காமலே சீட்டை பெற்றுக் கொண்டிருக்கிறார். எனக்கு சீட்டு வரவில்லை.
நான் அந்த பெண்மணியிடம் கேட்க, அவர் இன்னொருவரிடம் கேட்க, அவர் கொடுத்த காசுக்கெல்லாம் சீட்டு வந்துவிட்டதாக சொன்னார். அவரும், நானும் "முன்னாடி கொடுத்தவர்களிடம் சீட்டை சரிபாருங்கள் அதிகமாக இருந்தால் கொடுங்கள்." என்று நின்ற நபர்களிடம் வேண்டினோம். முன்னாடி நின்ற யாரும் திரும்பிக் கூட பார்க்க மனமில்லாதவர்களாய் நின்று கொண்டிருந்ததை கவனிக்கையில் வேதனையாக இருந்தது. அதிலும் அங்கே இருந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்
எனது வேதனைக்கான காரணம்... 5 ரூபாய் அல்ல*; ஆனால், அதற்கே நாட்டின் தூண்கள் எனப்படும் இளைஞர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாய் இருக்கிறதே...? அவர்கள்தான் வைத்திருப்பார்கள் என்று குற்றம்சாற்ற விரும்பவில்லை. குறைந்த பட்சம் தங்களது சீட்டினை சரிபார்த்திருக்கலாம் அல்லது வேறு யாரவது வைத்திருக்கிறீர்களா என அருகில் உள்ளவர்களிடம் கேட்டிருக்கலாம். ஒரு சிறு தவறு நடந்திருக்கிறது. இதனைக் கேட்ககூட மனமில்லாதவர்கள் போல இருப்பவர்களை கண்டுதான் மனம் புழுங்குகிறது.
என்னிடம் சீட்டு வாங்க காசு வாங்கிய பெண்மணி என்னிடம் மன்னிப்புக் கோரினார். அவர் மீது எந்த தப்பும் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. எத்தனையோ பேர் இந்தப் பிரச்னைகளுக்காவோ என்னவோ எவ்வளவு கூட்டம் இருந்தாலும் காசு
கொடுத்து அனுப்பும் போது முகத்தை திருப்பிக் கொண்டு கண்டுகொள்ளாதவர்கள் போல் இருப்பார்கள். இப்பொழுது பிரச்னை என்னவென்றால், உதவி செய்யும் அவரைப் போன்ற நல்லவர்கள் நமக்கேன் வம்பென்று ஒதுங்கிக் கொள்ளதானே தோன்றும்.
நான் அவரை சமாதானப்படுத்தி இன்னொரு சீட்டு வாங்கிக் கொண்டேன். இதே போல் இன்னொரு நிகழ்வை அவர் பார்க்க நேர்ந்தால், சந்திக்க நேர்ந்தால் அங்கே சிறிய உதவி என்றாலும், அந்தப் பெண்ணின் கருணை மனப்பாண்மையை மனித இனம் இழந்துவிடும்தானே..?
நிகழ்வு - 2 : நான் அலுவலகம் முடிந்து சென்று கொண்டிருந்த சமயம் ஓர் இளைஞர் என் அருகே வந்தார். "அண்ணா ஒரு பதினாறு ரூபாய் கொடுங்கள். நான் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்தேன். என்னை ஆய்வாளர்கள் பிடித்து காவல் நிலையத்தில் வைத்துவிட்டார்கள். அதோடு இருந்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு விட்டார்கள். நான் ஊருக்கு போக பணம் இல்லை," என்றார்.
எனக்கு அந்த நேரத்தில் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. அதோடு கையில் பிரபல அரசு கல்லூரிக்கான அடையாள அட்டையும் வைத்திருந்தார்.
"சரி என்னிடம் இப்போது சில்லறை இல்லை... மாற்றி தருகிறேன்," என அழைத்துச் சென்றேன். போகும்போதே என் மனம் பல்வேறு கேள்விக்கனைகளை தொடுத்தது. (ஒருவேளை அந்த நேரத்தில் சில்லறை இருந்திருந்தால் எடுத்து கொடுத்திருப்பேன்... பிறகு யோசனை செய்திருப்பேன்)
* இவர் உண்மையிலேயே பிரச்னையில் இருக்கிறாரா?
* ஏமாற்றுபவரா? அப்படியானால் நாம் ஏமாற போகிறோமா?
இப்படி பல கேள்விகள் என் மனதில் எழுந்ததற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.
சமீபத்தில் இதே போல் நண்பர் ஒருவர் ஏமாந்த அனுபவத்தை அறிந்தது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு குடும்பமே இதேபோல் தினமும் ஏமாற்றுவதை அந்த வழியில் நான் கண்டிருக்கிறேன். ஒரு வயது முதிர்ந்தவர், அவர் மனைவி, நடுத்தர வயதுள்ள ஒருத்தர், அவரது மனைவி மற்றும் ஒரு சின்னபெண், அவருக்கு 10ல் இருந்து 14க்குள் வயது இருக்கலாம். அந்த சின்னப் பெண்ணை சில சமயம் அந்த வயதானவருடனும், சில சமயம் நடுத்தர வயதுடையவர்களிடமும் பார்க்கலாம்.
இவர்களது வேலையே இரவு தொடங்கும் வேளையில் பேருந்து நிலையதுக்கு அருகில் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் "நாங்கள் பணத்தை தொலைத்துவிட்டோம் ஊருக்கு போக பணம் இல்லை உதவி செய்யுங்கள்," என கேட்பதுதான். பலர்
கண்டுகொள்வதில்லை. சிலர் அவர்களிடம் கருணை உள்ளத்தோடு பணத்தை கொடுக்கின்றனர். இவர்கள் இந்த ஏமாற்று வேலையையே தொழிலாக செய்கின்றனர். இவர்களை மாதத்தில் குறைந்த பட்சம் மூன்று முறையாவது நான் பார்த்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்கூட ஒரு பெண் கையில் தேடி எடுத்து 50 ரூபாயை கொடுத்ததை நான் காண நேர்ந்தது. நான் அந்த பெண்மனியிடம் எடுத்துச் சொல்லவும் முடியவில்லை... அவரை தடுக்கவும் முடியவில்லை.
உண்மையிலேயே நான் அந்த பையனுக்கு செய்த சிறிய உதவியை நினைத்து சந்தோஷபடுகிறேன். அதே சமயம் என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்றும் தெரியவில்லை. 50 ரூபாய் கொடுத்த பெண்ணின் கருணை உள்ளம் இங்கு கேள்விக்குறியாகிப் போனதை நினைத்து வருந்துகிறேன். ஒருவேளை அவருக்கு அது ஏமாற்று வேளை என்று தெரிந்தால் உண்மையிலேயே உதவி தேவைப்படும் ஒருவர் கருணையை இழக்க நேரிடத்தானே செய்யும்.
இப்படி நடக்கும் நிகழ்வுகளை வைத்து கொஞ்சம் இருக்கும் கருணை குறையத்தானே வாய்ப்பிருக்கிறது. மனித இனம் எவ்வளவோ மாற்றம் நிகழ்ந்தாலும் அன்பு, உதவி, பகிர்தல் என சில மாறாத குணங்களால் தான் நிலைத்திருக்கிறது என தோன்றும். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தால் அடுத்த தலைமுறைக்கு நாம் எதனை எடுத்துச் சொல்லப் போகிறோம்? வெறும் எச்சரிக்கை உணர்வை மட்டும்தானா?
tamilmantram.com க்கு நன்றி
No comments:
Post a Comment