Saturday, September 4, 2010

சந்தோஷம் வெளியே இல்லை....




எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தானே எமக்குள்ளேயே இருக்கிற சந்தோசத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்?

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்....!
எவரிடமிருந்தும் எதையும் எதிர்பாருங்கள்....!

குழப்பமாக இருக்கிறதா? கீழே வாசியுங்கள்
எவரிடமிருந்தும் நன்றி, உதவி, பிரதியுபகாரம், மதிப்பு போன்ற எதையும் எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் உங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்களாக இருந்தாலும் சரியே!

அதே நேரம் எவரிடமிருந்தும் (மேல் கூறியவர்கள் உட்பட) ஏமாற்று, சதி, பொய், என்பவற்றை எந்த நேரத்திலும் எதிர்பாருங்கள். உங்கள் நெருங்கியவர்கள் கூட உங்களை எந்த நேரத்திலும் ஏமாற்றலாம்.

நாம் ஒருவருக்கு பிரதியுபகாரத்தை எதிர்பார்க்காது உதவி செய்வோமேயானால் குறிப்பிட்ட செயல் சிறப்பாக முடியும் போது எமது மனம் பூரிப்படையும். அதே வேலை பிரதியுபகாரத்தை எதிர்பார்த்திருந்தோமேயானால் அது கிடைக்காதவிடத்து எமது சந்தோஷமும் கலங்கப்படும். அதாவது எதிர்பார்ப்புகள் உயர்ந்ததாக இருக்குமிடத்து ஏமாற்றமும் பெரிதாகவே இருக்கும்.

எந்த நேரத்திலும் நிகழ்காலத்தை பற்றியே முடிவுகளை அல்லது தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இறந்த காலத்தை பற்றி ஆதங்கப்படுவதிலும், எதிர்காலத்தை பற்றி அதிகம் எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை.

உங்கள் பொறுப்புகளை உங்களால் இயன்றவரை சிறப்பாக செய்ய முயற்சி செய்யுங்கள். அடுத்தவர்களுக்கு முடிந்தவரை உதவியும் உபாகாரமும் செய்யுங்கள். அனால் "நன்றி" என்ற குறைந்த பட்ச பிரதியுபகாரத்தையும் எதிர்பார்க்காதீர்கள்.

அதுவே உங்களுக்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும்!


நன்றி tamilmantram.com

1 comment: