Friday, September 3, 2010

உலக அழிவு

உலக அழிவு: இன்னும் 100 வருடங்களில் அழியப்போகும் ‘மனித’ இனம்!!

இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:

உடல் ஆரோக்கியம் சார்ந்த உறுதிமொழிகளை ஆறப்போடாதீர்கள். (உதாரணமாக, புகைப்பிடிப்பதை நிறுத்துவது, உடல் எடையைக் குறைப்பது, உடற்பயிற்ச்சி செய்வது போன்றவை). எதையும் நன்றே செய், அதையும் இன்றே செய் என்பதைப்போல, ஆரோக்கியம் சார்ந்த உறுதிமொழிகளை இப்போழுதே செயல்படுத்தத் தொடங்குங்கள்!

தலைப்பைப் படிச்ச உடனே, “ஆஹா…..ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா. திரும்பவுமா…..முடியல” அப்படீன்னு வடிவேலு ரேஞ்சுக்கு முனுமுனுத்திருப்பீங்களே…?! உங்களச் சொல்லி குத்தமில்ல. ஏன்னா, நம்ம ஆளுங்க ஆ….ஊ…ன்னா, ஒன்னுந்தெரியாத சின்ன பசங்கள “அதோ பாரு வெள்ளக் காக்கா”ன்னு சொல்லி ஏமாத்துற கதையா, புரியாத மாதிரியும் (சில சமயம் கொஞ்சம் புரியுறமாதிரியும்?!) எதையாவது ஒரு காரணத்தைச் சொல்லி உலகம் இப்போ அழியப்போகுது….அப்போ அழியப்போகுதுன்னு ஒரே பூச்சாண்டியா காட்டிக்கிட்டு இருந்தாய்ங்க இதுவரைக்கும்!

ஆனா என்ன, தீபாவளிக்கு வாங்கி நமத்துப்போன புஸ்வானம் மாதிரி எதுவுமே நடக்கல! இவிங்க காட்டின பூச்சாண்டிய எல்லாம் நீங்க மறந்துட்டீங்களோ என்னவோ, ஒரு சிலத நான் நல்லாவே நியாபகம் வச்சிருக்கேன். வாங்க முதல்ல அது என்னன்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் பதிவுச் செய்திக்குப் போவோம்…..

உலக அழிவு தினப் பட்டியல்களும் காரணங்களும்!

1. ஜனவரி 1, 2000/y2k பிரச்சினை: இந்தப் பிரச்சினைய நான் படிச்சி, புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் சொல்றேன். கடந்த 1833 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கணினியில, வருடாந்திர தகவல்களை சேமிக்க இரண்டு எண்களை மட்டுமே பயன்படுத்தினார்களாம். அதாவது, 1900 என்பதை “00″என்று குறியிடுவது!

அதனால, 2000 வருடம் வரும்போது அதேமாதிரி 2000-வது ஆண்டையும் “00″ என்று கணினி புரிந்துகொண்டால், 100 வருடங்களாக சேமித்து வைத்த எல்லா தகவல்களும் அழிந்து போய் உலகம் ஸ்தம்பித்து விடும் அப்படீன்னு ஒரு குண்டு போட்டாங்க நிறைய கணினித்துறை விஞ்ஞானிகள்?! அது ஒரு பிரச்சினைதான். ஆனா, உலகம் அழியற அளவுக்கு எல்லாம் பெரிய பிரச்சினை இல்லையாம். கைதேர்ந்த கணினி விஞ்ஞானிகள் ஒன்னா சேர்ந்தா ஓவர் நைட்ல முடிச்சிடக்கூடிய (?) பிரச்சினைதானாம்!

2. ஏப்ரல் 14. 2002/டூம்ஸ் கேட் பிரச்சினை: இந்த கிறிஸ்தவ மத உலகஅழிவுப் புரளிப்படி, 2002 ஆவது வருஷம் ஏப்ரல் 14-ந்தேதி, சரியா 12 மணி ஆக அரை நொடிக்கு முன்னாடி, டூம்ஸ்கேட் அப்படீன்னு ஒரு கதவு திறக்குமாம், அதிலிருந்து ஏசு கிறிஸ்து தோன்றி மறைவாராம். அதுக்கப்புறம் 45 நாள் கழிச்சு, அணு ஆயுதப் போர் உருவாகி உலகம் அழிஞ்சிடுமாம்.

இப்படி இன்னும் நெறைய புரளிகள். 1998-2012-க்குள்ள பல்வேறு காரணங்கள்னால உலகம் அழியப்போகுதுன்னு ஒரு பெரிய பட்டியலே இருக்கு. அதை இங்கே எழுதினா பதிவே மாறிடும்.

3. டிசம்பர் 21, 2012/டூம்ஸ்டே-உலக அழிவு: ரொம்பச் சமீபத்துல வந்து, உலகத்தை ரொம்பவே அல்லோலக் கல்லோலப் படவச்ச இந்தப் புரளியைப் பொறுத்தவரைக்கும், மாயன் நாளேடு அப்படீன்னு ஒரு நாளேட்டுல பல வருடங்களுக்கு முன்னாடியே உலகம் அழியப்போறதா குறிப்பு இருக்குறதாகவும், அப்படியே உலகம் அழியப்போறதாகவும் கருத்து நிலவியது.

இப்படி இதுவரைக்கும், உலகம் அழியப்போறதா பலப்பல புரளிகள் வந்துகிட்டே இருக்கு. அந்த வரிசையில ஆனா முற்றிலும் யதார்த்தமான, உலக தட்ப வெட்ப, உயிர்களின் வாழ்க்கை-பூமியின் யதார்த்த நிலையைச் சார்ந்த, உலகியல் வாழ்க்கை தரம் சார்ந்த காரணங்களுடன், நாம வாழ்கிற இந்த உலகம், இன்னும் 100 வருடங்களில் மெல்ல மெல்ல அழிந்துபோவதற்க்கான சாத்தியக்கூறுகள் இருக்குன்னு சொல்றாரு உலகின் தலைசிறந்த ஒரு விஞ்ஞானி!

அவரு யாரு, உலகம் அழியப்போறதுக்கான காரணங்களாக அவரு சொல்வது என்னென்ன, அது எந்த அளவுக்கு உண்மை/சாத்தியம் இப்படி பல விஷயங்களை அலசி ஆராயத்தான் இந்தப் பதிவு. வாங்க சும்மா பிரிச்சி மேஞ்சிடுவோம்……

‘சின்னம்மை’யை ஒழித்துக்கட்டிய ‘ஃப்ராங்க் ஃபென்னரும்’ மனிதஇன அழிவும்!

இந்த உலகத்தையும், உலக மக்களையும் 1980 ஆண்டு வரையில் பாடாய்ப்படுத்தி வந்த ஒரு கொடிய நோயான சின்னம்மையை ஒழித்துக்கட்டி, 1980 ஆம் ஆண்டு, உலக சுகாதார மாநாட்டில் “சின்னம்மை இந்த உலகிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்த பெருமை, ஆஸ்திரேலிய நாட்டு விஞ்ஞானி திரு. ஃப்ராங்க் ஃபென்னரையேச் சாரும்!

இத்தகைய ஒரு உலக சாதனையைப் புரிந்த விஞ்ஞானி ஃப்ராங்க் ஃபென்னர் அவர்கள்தான் இன்று இன்னும் 100 வருடங்களில் மனித அழிந்துவிடக்கூடிய பேராபத்து இருக்கிறது என்கிறார். அதற்க்கு அவர் கூறும் காரணங்கள்:

அசுரத்தனமான வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் உலக ஜனத்தொகைப் பெருக்கம்
மீண்டும் சரிசெய்ய முடியாத அளவுவரை சென்றுவிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும்
மனிதனுக்கு ஒவ்வாத உலக பருவநிலை மாற்றங்கள்

சரி, இன்னும் 100 வருடங்களில் மனித இனம் அழிய என்னென்ன காரணங்கள்னு இப்போ தெரிஞ்சுப்போச்சு. ஆனா, இந்தக் காரணங்கள் எப்படி மனித இனத்தை அழிக்கும்னு தெரியனுமில்லீங்களா? இனிமே அதைத்தான் ஒவ்வொன்னா பார்க்கப்போறோம்….
உலக ஜனத்தொகை பெருக்கமும் உணவுப்பற்றாக்குறையும்!

தற்போது ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் பேராசரியராக இருக்கும் திரு. ஃபென்னர், அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் உலக ஜனத்தொகை, அதற்க்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் உணவு உற்பத்தி, அதன் விளைவாக ஏற்படும் உணவுப்பற்றாக்குறை என எல்லாம் சேர்ந்து, இன்னும் 100 வருடங்களில் மனித இனத்தையும், இன்னி பிற விலங்கு/தாவரங்களையும் அழித்துவிடும் என்கிறார்!

“ஐக்கிய நாடுகள் சபையின் கடந்த வருட கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை 6.8 பில்லியன் (680 கோடி!) என்றும், அடுத்த வருடம் இது 7 பில்லியனாகிவிடும் (700 கோடியாக) என்றும் தெரியவருகிறது!”

“என்னடா இது, உலகத்தையே பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தொரு கொடிய உயிர்க்கொல்லி நோயான சின்னம்மையை ஒழித்துக்கட்டிய ஒரு தலைசிறந்த விஞ்ஞானியே இப்படிச்சொல்கிறாரே, இது சுற்றுச்சூழல் மற்றும் உலக வெப்பமயமாதல் போன்ற பல இமாலய பிரச்சினைகளை நம்பிக்கையோடு முறியடித்துவிட முயன்றுகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளையும், தன்னார்வலர்களையும் சோர்வடையச் செய்துவிடாதா” அப்படீன்னு யோசிக்கிறீங்களா?

வாஸ்தவம்தான்! ஆனா, திரு. ஃபென்னர் அவர்கள் சொல்றதையும் நாம கவனமா/ஆழமா யோசிச்சுப்பார்த்தோம்னா நமக்கே அவர் சொல்வது நல்லா புரியும். அதாவது, “உலகில் இதுவரை ஏற்பட்டுள்ள ஜனத்தொகை, சுற்றுச்சூழல் பாதிப்பு இவையெல்லாம் மீண்டும் சரிசெய்ய முடியாத வகையிலான ஒரு பாதிப்பு என்றும், உலகம் தொழில்மயமாக்கல் என்னும் மாற்றத்திற்க்குட்பட்ட Anthropocene என்னும் காலம்முதல் இன்றுவரையிலான சுற்றுச்சூழல் பாதிப்பானது உலகை பெருமளவு பாதித்துவிட்டிருக்கிறது, மேலும் இந்தப் பாதிப்பானது விண்கற்கள் மற்றும் துருவப் பனி உருகுவதால் ஏற்படும் ஆபத்தைவிட அதிகப் பாதிப்புடையது என்றும், The Australian என்னும் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் திரு.ஃபென்னர்!

“ஈஸ்டர் தீவு” (Easter Island) எனும் ஒரு எடுத்துக்காட்டு!

அதெல்லாம் சரி, உலகம் இதுவரை சந்தித்துள்ள பாதிப்புகளால் ஏற்படப்போகும் உலக அழிவுக்கு உதாரணமாக ஏதேனும் ஆதாரம் அல்லது கூற்று இருக்கிறதா அப்படீன்னு நீங்க கேட்டீங்கன்னா, “இருக்கிறது” என்பதுதான் பதில் துரதிஷ்டவசமாக! உலக பரும நிலை மாற்றமானது இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. ஆனால், இந்த மாற்றம் நம் மானுட அழிவுக்கும் வித்திடலாம் என்கிறார் ஃபென்னர்! அதற்க்கு உதாரணமாக அவர் குறிப்பிடுவது இப்போது அழிந்துவிட்ட “ஈஸ்டர் தீவு” என்னும் ஒரு பண்டைய தீவும் அதில் வாழ்ந்த மக்களும்!

ஈஸ்டர் தீவு

ஈஸ்டர் தீவு (Easter Island): தற்போது சிலி (Chile) நாட்டு எல்லைக்குள் இருக்கும் ஈஸ்டர் தீவு, ராபா நுயி (Rapa nui) என்று அழைக்கப்படுகிறது! தென்பசிபிக் கடலில் அமைந்திருக்கும் இந்தத் தீவு, மோவாயி (Moai) என்னும் சிலைகளுடன் ஒரு தேசிய பூங்காவாக பாதுகாக்கப்பட்டு வருகிறது!

ஆனால், 1 கி.பி ஆண்டு வாக்கில் இங்கு குடியேறிய மக்கள், மக்கள்தொகை வளர வளர அங்குள்ள காடுகளை அழிக்கவேண்டிவந்தது. அதன் விளைவாக மரவாழ் விலங்குகள் அழிந்துபோயின. பின்பு 1600 கி.பி ஆண்டு வாக்கில், அந்த மக்களின் நாகரிகம் கட்டுடைந்து குலைந்துபோய், 19 நூற்றாண்டு வாக்கில் அந்த தீவு மக்களே அழிந்துபோனார்கள்! விளைவு, தற்போது தேசிய பூங்காவுக்கும், சில நிறுவனங்களின் ஆடு வளர்ப்புக்கும் கூடாரமாகி நிற்க்கிறது ஈஸ்டர் தீவு இன்று!

இந்த ஈஸ்டர் தீவு குறித்த மேலதிக விவரங்களுக்கு விக்கிப்பீடியாவின் தகவல்தொகுப்புக்குச் செல்லுங்கள்!

ஆக, இந்த நிகழ்கால உதாரணம் மூலமா ஃபென்னர் என்ன சொல்ல வர்றாருன்னா, ஈஸ்டர் தீவு மக்களுக்கு ஏற்பட்ட கதிதான் உலக மக்களாகிய நமக்கும் என்கிறார்! அதாவது, அதிக மக்கள் என்றால் குறைந்த செல்வங்கள்/வளம் என்று பொருள். குறைந்த வளத்துக்காக (முக்கியமாக உணவு) அதிக மக்கள் போராடும்போது, மக்கள் போர்தான் அதன் விளைவு/முடிவு!

தன்னம்பிக்கயும் முயற்ச்சியும் வெற்றியைத் தரும்!

பரிணாமவியலாளர் திரு. ஜாரிட் டயமண்ட் அவர்களின் கூற்றுப்படி, ஈஸ்டர் தீவு மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளும், தற்போது நம் உலகில் ஏற்படும் விளைவுகளும் ஒன்றுக்கொண்டு பொருத்தமாக இருக்கின்றன என்று தெரியவருகிறது?! திரு.ஃபென்னர் போலவே பல விஞ்ஞானிகள் அவநம்பிக்கையுடன் கருத்து தெரிவித்து வந்தாலும், சுற்றுச்சூழல் பாதிப்பிலிரிந்து இந்த உலகை மீட்டுவிடலாம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உழைத்துவரும் பல விஞ்ஞானிகளும் இருக்கவே செய்கிறார்கள் நம்மிடையே!

அத்தகைய விஞ்ஞானிகளுள் ஒருவரும், திரு.ஃபென்னர் அவர்களுடன் பணிபுரிந்த சக விஞ்ஞானியுமான ஓய்வுபெற்ற பேராசிரியர் திரு.ஸ்டீஃபன் பாய்டன் (Stephen Boyden)! சரியான விழிப்புணர்வும், அதன் விளைவாக ஏற்படும் உலகியல் வாழ்க்கை மாற்றங்களும் சேர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயல்பு நிலையை மீண்டும் நிலைநாட்டவல்ல புரட்ச்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று திடமாக தாம் நம்புவதாக கூறுகிறார் திரு.பாய்டன்!

உலகை மீட்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவே எனும்போதும், அந்த இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் உழைக்கவேண்டியது மிக மிக அவசியம் என்றும், இம்மாற்றத்தை சாத்த்யமாக்கவல்ல விஞ்ஞான அறிவு இருந்தாலும் அரசியல் நோக்கம் இல்லாததுதான் கவலையளிக்கிறது என்கிறார் விஞ்ஞானி பாய்டன் அவர்கள்.

எங்கே செல்லும் இந்தப் பாதை???

சரி. இப்போ இன்னும் 100 வருடங்கள்ல மனித இனம் அழிவதற்க்கான காரணங்கள், சாத்தியக்கூறுகள், உதாரணங்கள் இப்படி எல்லாத்தையும் விஞ்ஞானிகளின் கூற்றுக்கள் வாயிலாக பார்த்தாச்சு. ஆனா, இந்த மனித இன அழிவை தடுக்க நாம என்ன செய்யனும்னு தெரியனுமில்லீங்களா? ஏன்னா, அப்படித்தெரிஞ்சாத்தானே பொதுமக்களாகிய நாமளும் நம்மைச் சார்ந்தவருக்கு இந்த கருத்துக்களைச் சொல்லி, உலக அழிவை/மனித இன அழிவை தடுக்க நம்மாலாந முயற்ச்சிகளைச் செய்ய முடியும்?!

இன்னும் 100 வருஷத்துல மனித இனம் அழியப்போகுதுன்னு கருத்துத் தெரிவிச்ச விஞ்ஞானி திரு.ஃபென்னர் அதை தடுக்க எதாவது சொல்லுவாருன்னு பார்த்தா அந்தச் செய்தியறிக்கை/நேர்முகத்துல அவரு எதையும் சொன்னதாக தெரியல. அதுக்காக, நாமளும் அப்படியே விட்டுட முடியுமா? கண்டிப்பா முடியாது. ஏன்னா, அப்புறம் இந்தப் பதிவு எழுதினதுக்கு ஒரு அர்த்தமே இல்லாமப் போயிடும்!

அதனால, பருவ நிலை மாற்றம், உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை குறைக்க அன்றாட வாழ்க்கையில், நம்மாலான முயற்ச்சிகளைச் செய்ய என்னென்ன செய்யலாம்னு எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சொல்றேன். இது போதலைன்னா உங்களுக்குத் தெரிஞ்ச உத்திகள்/கருத்துகள நீங்க மறுமொழியிலச் சொல்லிட்டுப் போங்க…..

தேவையே இல்லாமல்/அனாவசியமாக எரிந்துகொண்டிருக்கும் மின்விளக்குகள், மின்சாதனங்கள் எல்லாவற்றையும் (வீடு, அலுவலகம், பொதுவிடங்கள் இப்படி) எங்கே இருந்தாலும் அணைக்க முயற்ச்சி செய்யுங்கள்
சுற்றுச்சூழலை பாதிக்கும் “ப்ளாஸ்டிக்” பைகளை உபயோகிப்பதை நிறுத்துங்கள்/குறைக்க முயற்ச்சியுங்கள் (மற்றவர்களையும் நிறுத்தத் தூண்டுங்கள்!)
தண்ணீரை அனாவசியமாக விரயமாக்காதீர்கள்
உங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க முயலுங்கள்
குழந்தைகளுக்கு உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!
சுற்றுச்சூழலை பாதிக்கும் வாகனங்கள் இல்லாமல் செல்லக்கூடிய இடங்களுக்கு மிதிவண்டியில்/நடந்து சென்று பழகுங்கள்!
வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மரம் என மரக்கன்றுகள் நட்டு வளர்க்கச் செய்யுங்கள்
மீதமான உணவை இல்லாத ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், விலங்குகளுக்கும் கொடுங்கள்
உலக வெப்பமயமாதலின் பாதிப்புகளை குறைக்கவல்ல ஏதேனும் ஒரு யுக்தியை அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்த முயற்ச்சியுங்கள்!
அன்றாட வாழ்க்கையில் மின்சாரப் பயன்பாட்டை இயன்ற அளவு குறைக்க முயலுங்கள்

1 comment: