Friday, September 3, 2010

`பணம் பத்தும் செய்யுமா...?...?



வெறுமனே பணத்தாள்களைத் தொடுவதும், அல்லது பணம் செலுத்தப்பட்ட ரசீதுகளைப் பற்றி நினைப்பதும் மனிதர்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதைக் கண்டுபிடித்துள்ளனர் உளவியல் ஆய்வாளர்கள். இதைத் தான் பெரியவர்கள் `பணம் பத்தும் செய்யும்!’ என்று கூறினார்களோ?! `மனோதத்துவியல் அறிவியல்’ இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆய்வில் 80 இளநிலைப் பட்டதாரிகள் தன்னார்வப் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.



அவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு `விரல்களைப் பயன்படுத்தும் திறன்’ சோதனை நடத்தப்பட்டது. ஒரு குழுவினர் பணத்தாள் கட்டிலிருந்து 100 டாலர் நோட்டுகளை எண்ண அனுமதிக்கப்பட்டனர். மற்றொரு குழுவினர் சாதாரண காகிதங்களை எண்ணும்படி கூறப்பட்டனர். பின்னர் அவர்களின் மனஅழுத்த நிலையை அறிவியல்பூர்வமாகப் பரிசோதித்தபோது, பணத்தை எண்ணியவர்களுக்கு வெற்றுக் காகிதங்களை எண்ணியவர்களை விட மன அழுத்தம் குறைவாக இருப்பது தெரியவந்தது.



உடல் வலியில் பணத்தாள்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவதற்கான சோதனையில் 96 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களும் இரு குழுவாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழுவினர் பணத்தாள்களையும், மற்றொரு குழுவினர் வெற்றுக்காகிதங்களையும் எண்ணும்படி கூறப்பட்டனர். பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் பணத்தை எண்ணியவர்களின் உடல்ரீதியான வலி, வெற்றுக் காகிதங்களின் எண்ணியவர்களின் வலியை விடக் குறைவாகி இருப்பது அறிவியல்பூர்வமாக நரூபிக்கப்பட்து. “



இந்த ஆய்வு முடிவுகள் பணத்தின் ஆற்றலை நிரூபிக்கின்றன. பணத்தை ஓர் அடையாளமாகப் பயன்படுத்தும்போது கூட அது வலி போன்ற உண்மையான உணர்வுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது தெரிய வந்திருக்கிறது” என்கிறார், மின்னசோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சந்தைப்படுத்துதல் பேராசிரியரும் ஆய்வில் ஈடுபட்டவருமான கேத்தலீன் வோஸ். மனிதர்கள் சமூகத்துடன் கலந்து பழகும்போது பணம் அளிக்கும் அந்தஸ்தால் எழும் உணர்வுகளில் பணத்தின் தாக்கம் குறித்து முந்தைய ஆய்வுகள் கூறின.



அதாவது, வசதியானவர் என்று எல்லோராலும ஏற்றுக்கொள்ளப்படுவது, அதனால் பிரபலமாக இருப்பது, அவர்கள் மற்றவர்களால் விரும்பப்பட்டாலும் விரும்பப்படாவிட்டாலும் வேண்டியதைப் பெறுவது போன்ற விஷயங்களை அந்த ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால் பணம் நேரடியாக உடல், உளவியலில் ஏற்படுத்தும் தாக்கம் தற்போதுதான் அறியப்பட்டிருக்கிறது, இது ஆச்சரியகரமானது என்று உளவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1 comment: